
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் ஐபிஎல் தொடரை பார்த்து வருகின்றனர். ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் மாதம் 21ம் தேதி தொடங்க இருக்கிறது. அடுத்த மாதம் 19ம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடங்க உள்ள நிலையில், ஐபிஎல் தொடரின் அட்டவணையை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்தவுடன் ஐபிஎல் தொடர் தொடங்குவதால் வீரர்களுக்கு ஓய்வில் இருக்க போதிய காலஅவகாசம் இல்லை. இதனால் ஐபிஎல் தொடர் மார்ச் 21ம் தேதி திட்டமிட்டபடி தொடங்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தலைவர் அருண் துமல் இந்த விஷயத்தை தெளிவுப்படுத்தியுள்ளார். மார்ச் 21ம் தேதி திட்டமிட்டபடி ஐபிஎல் தொடர் தொடங்கும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அருண் துமல், ''ஐபிஎல் சீசன் மார்ச் மாதத்தில் தொடங்கும். தொடங்கும் தேதி மார்ச் 21 என ஏற்கெனவே நிர்ணயம் செய்யபப்ட்டுள்ளது. இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்த தேதியில் திட்டமிட்டபடி போட்டிகள் தொடங்கும். ஐபிஎல் போட்டித் தொடர் அட்டவணை விரைவில் வெளியிடப்படும்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அருண் துமல், ''ஐபிஎல் உலகின் மிக முக்கியமான கிரிக்கெட் லீக் ஆகும். உலகின் தரமான வீரர்கள் வந்து விளையாடுகிறார்கள். ஐபிஎல் 2025 தொடர் மற்ற ஐபிஎல் தொடர்களை விட சிறப்பாக இருக்கும். ஐபிஎல் போட்டி விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை. 2023 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் அம்சம் அப்படியே தொடரும்'' என்று தெரிவித்தார்.
ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா; வரலாற்று சாதனை!
ஐபிஎல் போட்டிகளில்'இம்பாக்ட் பிளேயர்' என்ற விதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஒரு கிரிக்கெட் அணியில் பிளேயிங் லெவன் எனப்படும் 11 பேர் கொண்ட வீரர்கள் விளையாடுவார்கள். இது தான் விதி. ஆனால் இம்பாக்ட் பிளேயர் விதி என்பது வழக்கமான ஆடும் லெவனில் உள்ள 11 வீரர்கள் தவிர, மேலும் 5 வீரர்களை டாஸ் போடும்போது அந்தந்த அணிகள் அறிவிக்க வேண்டும். இந்த 5 வீரர்களில் யாராவது ஒருவரை தேவைக்கு ஏற்றார்போல் அணியில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதாவது இந்த 5 வீரர்களில் ஒருவரை ஒரு பந்துவீச்சாளருக்குப் பதிலாக பேட்ஸ்மேனாகவோ அல்லது பேட்ஸ்மேனுக்கு பதிலாக பவுலராக பயன்படுத்திக் கொள்ளலாம். இம்பாக்ட் பிளேயர் விதியால் ஐபிஎல் அணிகளுக்கு கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது ஒரு பவுலர் கிடைப்பார்கள். கடந்த 2023ம் ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்ட இந்த இம்பாக்ட் பிளேயர் விதியை நீக்க வேண்டும் என்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட பலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து கருத்து தெரிவித்துள்ள ரோகித் சர்மா, '' இம்பாக்ட் பிளேயர் தேவையில்லாத ஒன்று. இந்த விதி ஆல்ரவுண்டர்கள் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறது. கிரிக்கெட் 11 வீரர்கள் விளையாடுவதாக இருக்க வேண்டுமே தவிர, 12 வீரர்கள் விளையாடுவதாக இருக்கக் கூடாது. இம்பாக்ட் பிளேயர் விதியால் இளம் வீரர்களின் திறமை வெளியே தெரியாமல் போகிறது'' என்றார்.
ரோகித் சர்மா கருத்தை ஆமோதித்த விராட் கோலி, ''ரோஹித் சர்மாவின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இம்பாக்ட் பிளேயர் விதி ஆட்டத்தின் சமநிலையை சீர்குலைக்கிறது. இந்த விதியை மாற்றுவது குறித்து யோசிக்க வேண்டும்'' என்றார்.
இப்படி பல்வேறு முன்னணி வீரர்கள் வலியுறுத்தியதால் 2025 ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி நீக்கப்படும் அல்லது மாற்றம் செய்யப்படும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இம்பாக்ட் பிளேயர் விதி மாற்றப்படாது என்று ஐபிஎல் தலைவர் இப்போது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிசியின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதை வென்ற ஜஸ்பிரித் பும்ரா; வரலாற்று சாதனை!