
இந்திய கிரிக்கெட்டின் தடுப்புச்சுவர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கிரிக்கெட் என்று சொன்னாலே அதில் ராகுல் டிராவிட்டின் பெயர் இடம் பெறாமல் போகாது. உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ராகுல் டிராவிட், தனது தனித்துவமான பேட்டிங்கின் மூலம் பல கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகளை படைத்துள்ள ராகுல் டிராவிட் 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்கள், 83 அரைசதங்களுடன் 10,899 ரன்களும், 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 52.31 சராசரியுடன் 36 சதங்கள், 63 அரைசதங்களுடன் 13,288 ரன்கள் குவித்துள்ளார். 'இந்திய கிரிக்கெட்டின் தடுப்புச்சுவர்' என்றழைக்கப்படும் டிராவிட்டை டெஸ்ட் போட்டிகளில் அவுட்டாக்குவது எவ்வளவு கடினம் என்பது அவருக்கு பவுலிங் போட்ட பந்துவீச்சாளர்களுக்குதான் தெரியும்.
கிரிக்கெட் வரலாற்றில் தனி முத்திரையை பதித்த ராகுல் டிராவிட்டின் சிறந்த 5 டெஸ்ட் இன்னிஸ்களை பார்ப்போம்.
பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் (2003)
2003ம் ஆண்டு அடிலெய்டில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையின் இரண்டாவது டெஸ்டில் ராகுல் டிராவிட் விளையாடிய டெஸ்ட் இன்னிங்ஸை யாரும் மறந்திருக்க முடியாது. மிகச்சிறப்பான ஆட்டத்தின் மூலம் இரட்டை சதம் (233 ரன்கள்) அடித்த டிராவிட் இந்தியா 523 ரன்கள் எடுக்க உதவினார்.
ஒரு கட்டத்தில் இந்தியா 85/4 என தவித்த நிலையில், விவிஎஸ் லக்ஷ்மணனுடன் ஆறாவது விக்கெட்டுக்கு 303 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார், லக்ஷ்மண் 148 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியின் 2வது இன்னிங்சிலும் டிராவிட் 170 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெற வைத்ததுடன் ஆட்டநாயகனாகவும் ஜொலித்தார்.
கொல்கத்தா டெஸ்ட் (2001)
ராகுல் டிராவிட்டின் வாழ்க்கையிலும் சரி, கிரிக்கெட் ரசிகர்களின் சரி மறக்கமுடியாத ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் இதுதான். 2001ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவிக்க, இந்தியா 171 ரன்களில் சுருண்டு பாலோ ஆன் ஆனது. இனி இந்தியாவின் கதை முடிந்தது என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ராகுல் டிராவிட், லக்ஷ்மணுடன் இணைந்து இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றை மாற்றி அமைத்தார்.
விவிஎஸ் லக்ஷ்மணனும், டிராவிட்டும் இணைந்து 2வது இன்னிங்சில் ஐந்தாவது விக்கெட்டுக்கு 376 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை கடுமையாக சோதித்த டிராவிட் 180 ரன்கள் அடித்தார். லக்ஷ்மண் 281 ரன்கள் குவித்தார். ஒரு கட்டத்தில் இந்தியா தோற்று விடும் என கருதப்பட்ட நிலையில், டிராவிட்லக்ஷ்மணின் பிரமிக்க வைக்கும் ஆட்டத்தால் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி பெற்றது.
'இந்தி தேசிய மொழி கிடையாது'; அழுத்தம் திருத்தமாக சொன்ன அஸ்வின்; பாஜக கடும் எதிர்ப்பு!
ராவல்பிண்டி டெஸ்ட் (2004)
டெஸ்ட் கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டின் சிறந்த இன்னிங்சில் இதுவும் முக்கியாமனது. 2004ம் ஆண்டு ராவல்பிண்டியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ராகுல் டிராவிட் 270 ரன்கள் எடுத்தார். ஒருபக்கம் ஷோயப் அக்தர், முகமது சமி மற்றும் டேனிஷ் கனேரியா போன்ற உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இந்திய விக்கெட்டுகளை வீழ்த்த ராகுல் டிராவிட் எதற்கும் அசைந்து கொடுக்காமல் நீண்ட நேரம் களத்தில் நின்று தனது மன உறுதியான ஆட்டத்தின் மூலம் எதிரணி பவுலர்களை சோர்வடைய செய்து இந்திய அணி 600 ரன்கள் குவிக்க உதவினார். இந்த போட்டியில் இந்தியா மிகப்பெரும் வெற்றி பெற்றது.
ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் (1997)
1997ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா மண்ணில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் ராகுல் டிராவிட் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த 3வது டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 141 ரன்கள், 2வது இன்னிங்சில் 81 ரன்கள் அடித்து போட்டியை டிரா செய்ததுடன், தென்னாப்பிரிக்கா தொடரை வொயிட் வாஷ் செய்வதையும் தடுத்தார். இது ராகுல் டிராவிட்டின் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் (2006)
இந்திய அணி ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும்போதெல்லாம் அணிக்கு கைகொடுக்கும் முதல் நபராக டிராவிட் இருப்பார். அப்படி ஒரு இன்னிங்ஸ் தான் இது. 2006ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரின் நான்காவது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் பாஸ்ட் பவுலர்களின் தாக்குதலை சமாளித்து 215 பந்துகளில் 81 ரன்கள் இந்திய அணி 200 ரன்கள் எடுக்க உதவினார். இரண்டாவது இன்னிங்ஸிலும் 166 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸுக்கு 269 ரன்கள் இலக்கு நிர்ணயிக்க உதவினார். இந்த போட்டியில் வென்ற இந்தியா தொடரையும் கைப்பற்றியது.
அதிக பந்துகளை எதிர்கொண்டவர்
ராகுல் டிராவிட் தனது கடைசி டெஸ்ட் போட்டியை 2012ம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் (13,288 ரன்கள்) சர்வதேச அளவில் 4வது இடத்தில் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக பந்துகளை எதிர்கொண்டவர் (31,258 பந்துகள்) மற்றும் அதிக நிமிடங்கள் விளையாடியவர் (44,152 நிமிடங்கள்) என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
கிரிக்கெட் வீரராக மட்டுமில்லாமல் ஒரு பயிற்சியாளராகவும் இந்திய அணியை உச்சத்தில் கொண்டு சென்றவர் டிராவிட். இவரது பயிற்சியின்கீழ் தான் கடந்த ஆண்டு இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
கோ கோ உலகக் கோப்பை 2025! யார் இந்த கேப்டன் பிரியங்கா இங்கிள்?