
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33ஆவது ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த ஜூலை 26 ஆம் தேதி ஒலிம்பிக் தொடக்க விழா நிகழ்ச்சியுடன் போட்டிகள் தொடங்கப்பட்டது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தடகளம், துப்பாக்கி சுடுதல், ஜூடோ, ரோவிங், பேட்மிண்டன், டென்னிஸ், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல், குத்துச்சண்டை, படகு போட்டி, ஹாக்கி என்று 16 விளையாட்டு போட்டிகளில் இடம் பெற்று விளையாடி வந்தனர்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் தொடங்கி இன்றுடன் 15 நாட்கள் ஆன நிலையில் இந்தியா 5 வெண்கலப் பதக்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் என்று மொத்தமாக 6 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 69ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னிங் சிங், நீரஜ் சோப்ரா, அமன் செராவத் ஆகியோர் பதக்கம் வென்றுள்ளனர். மேலும் ஹாக்கி இந்தியாவும் பதக்கம் வென்று கொடுத்துள்ளது.
இந்த நிலையில் தான் இந்த தொடரில் இடம் பெற்று விளையாடிய 117 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு சம்பளம் வழங்கப்படுகிறதா என்று கேட்டால் அதற்கான பதில் இல்லை என்பது தான். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊதியம் கிடைக்குமா?
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு சம்பளம், பரிசுத் தொகை என்று எதுவும் வழங்குவதில்லை. பதக்கம் மட்டுமே அவர்களுக்கு மிச்சம். ஆனால், அந்த பதக்கத்தின் விலை தங்கமாக இருந்தால் ரூ.70 லட்சம், வெள்ளி என்றால் ரூ.50 லட்சம் மற்றும் வெண்கலப் பதக்கம் என்றால் ரூ.30 லட்சம் ஆகும். இது அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப மாறுபடும்.
ஒலிம்பிக் கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தங்களது செலவுகளுக்கு பணம் செலுத்துகிறார்களா? என்று கேட்டால் இல்லை. ஏனென்றால், ஒலிம்பிக் கிராமத்தில் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தங்க வைக்கப்படும் விளையாட்டு வீரர்களுக்கு ஆகும் செலவை ஒலிம்பிக் கமிட்டியே ஏற்றுக் கொள்கிறது.
இதில், அவர்களுக்கான உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து போன்ற செலவுகளை ஒலிம்பிக் கமிட்டி ஏற்றுக் கொள்கிறது. இதில், பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த அணிகள் கார்ப்பரேட் அல்லது தனியார் ஸ்பான்ஸர்களை கொண்டிருக்கின்றன. அவர்கள் ஒலிம்பிக் வீரர்களுக்கான செலவுகளை ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் வேறு என்ன வழியில் பணம் சம்பாதிக்கிறார்கள்?
விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வெல்வதை தவிர பணம் சம்பாதிக்க தனிப்பட்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். பதக்கம் மட்டுமே விளையாட்டு வீரர்களுக்கு போதுமானதாக இருக்குமா என்றால் அது இருக்காது. அவர்கள் வாழ்வதற்கு போதுமான வருமானம் தேவை. ஒவ்வொரு 4 வருடங்களுக்கு ஒரு முறை தான் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும்.
ஆதலால், விளையாட்டு வீரர்கள் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். மற்றொன்று பிராண்ட் ஒப்பந்தம். அந்தந்த பிராண்டு நிறுவனங்களின் விளம்பரங்களில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இடம் பெறலாம்.
தடகள வீரர், வீரர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது.
விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான உடல் சிகிச்சை நிபுணருக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
விளையாட்டு உளவியாலளருக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
உடற்பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரூ.4 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது.
விளையாட்டு மேலாண்மை – மேனேஜர், சீனியர் மேனேஜர் ஆகியோருக்கு ஆண்டுக்கு ரூ.11 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையில் வழங்கப்படுகிறது.