CSK scored just 103 runs against KKR: ஐபிஎல் கிரிக்கெட்டின் 25வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் அஜிங்யே ரஹானே தங்கள் அணி முதலில் பவுலிங் செய்யும் என அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி கொல்கத்தா வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறியது.
24
CSK vs KKR, IPL
தொடக்க வீரர் டேவான் கான்வே 12 ரன்னில் மொயின் அலி பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இதனைத் தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 4 ரன்னில் ஹர்தித் ராணா பந்தில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார். இதன்பிறகு களமிறங்கிய விஜய் சங்கர் ஓரளவு அதிரடியாக விளையாடினார். 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசிய விஜய் சங்கர் 29 பந்தில் வருண் சக்கரவர்த்தி பந்தில் கேட்ச் ஆனார்.
இதன்பின்னர் சிஎஸ்கே முழுமையாக தடம் புரண்டது. ரன்கள் அடிக்கவே தடுமாறிக் கொண்டிருந்த ராகுல் திரிபாதி (22 பந்தில் 16 ரன்) சுனில் நரைன் சூப்பர் பந்தில் போல்டானார். பிறகு முன்னதாக களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வினை (1 ரன்) ஹர்சித் ராணா காலி செய்தார். இதனைத் தொடர்ந்து வந்த ரவீந்திர ஜடேஜா நரைன் பந்தில் டக் அவுட் ஆனார்.
சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் அனைவரும் பெவிலியன் வருவதும் அவுட்டாகி திரும்பி செல்வதுமாக இருந்த நிலையில், மதிஷா பதிரனாவுக்கு பதிலாக பேட்ஸ்மேன் தீபக் ஹூடா இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். ஆனால் அவரும் கொஞ்சம் கூட பொறுப்பின்றி ரன் ஏதும் எடுக்காமல் வருண் சக்கரவர்த்தி பந்தில் கேட்ச்சாகி வெளியேறினார்.
இதற்கிடையே ரசிகர்களின் வழக்கமான ஆரவாரத்துக்கு இடையே தோனி களம் புகுந்தார். தோனியாவது அணியை காப்பாற்றுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவரும் வெறும் 1 ரன்னில் சுனில் நரைன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இது குறித்து தோனி ரீவியூ செய்த நிலையில் 3ம் நடுவர் அவுட் கொடுத்தார். ரீப்ளேவில் பந்து லேசாக உரசியதுபோல் தெரிந்தது. ஆனாலும் 3ம் நடுவர் அவுட் கொடுத்தது சிஎஸ்கே ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
44
Chennai Super Kings vs Kolkata Knight Riders
முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதுபோல் தொடக்கத்தில் இருந்து தடுமாறிய சிஎஸ்கேவால் இறுதி வரை மீளவே முடியவில்லை. 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 9 விக்கெட் இழந்து 103 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷிவம் துபே ஓரளவு பேட்டிங் செய்து 31 ரன்கள் எடுத்து அணி 100 ரன்களை கடக்க உதவினார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அனி தரப்பில் சுனில் நரைன் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். எளிய இலக்கை நோக்கி கொல்கத்தா அணி விளையாடுகிறது.