'இது நியாயமில்லை; இந்திய அணி செய்தது தவறு'; வெளுத்து வாங்கிய அஸ்வின்; என்ன நடந்தது?
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி 3 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்தியா இங்கிலாந்து இடையே 5வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், இந்தியா வெற்றி பெற்ற 4வது டி20 போட்டி பெரும் சர்ச்சையில் முடிந்தது. இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4வது டி20 போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்ற இந்தப் போட்டியில், இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழந்து 181 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா (30 பந்தில் 53 ரன்கள்), ஷிவம் துபே (34 பந்தில் 53 ரன்கள்) ஆகியோர் சூப்பர் அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் சாகிப் மஹ்மூத் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்பு ஆடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆலவுட்டாகி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தியா-இங்கிலாந்து டி20
இந்த போட்டியில் முதலில் பிளேயிங் லெவனில் இல்லாத இந்திய பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா எதிர்பாராத விதமாக அறிமுகமாகி, அற்புதமான பந்துவீச்சால் இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். அதாவது 4 ஓவர்கள் வீசிய அவர் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியின் மூலம் ஓடிஐயில் அறிமுகமனா ஹர்ஷித் ராணா முதலில் பிளேயிங் லெவனில் இல்லை.
ஆனால் ஓவர்டான் வீசிய பந்து ஷிவம் துபேவின் ஹெல்மெட்டில் தாக்கியதால் அவருக்கு லேசான தலைசுற்றல் இருந்தது. இதனால் அவரால் இந்திய அணி பீல்டிங்கின்போது விளையாட முடியாததால் அதற்கு பதிலாக ஹர்ஷித் ராணா களமிறங்கி இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளார். ஆனால் ஹர்ஷித் ராணா களமிறங்கியதற்கு இங்கிலாந்து அணியினர், முன்னாள் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரச குடும்பத்தின் செல்லப்பிள்ளை! இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் தெரியுமா?
ஹர்ஷித் ராணாவுக்கு எதிர்ப்பு
ஏனெனில் ஐசிசி விதிகளின்படி ஒரு வீரர் போட்டியின்போது காயம் அடைந்து வெளியேறினால் அவருக்கு பதிலாக அதே சரிசமம் உடைய மாற்று வீரரைத் தான் களமிறக்க வேண்டும். ஷிவம் துபே பேட்டிங் மற்றும் மித வேகப்பந்து வீச்சாளர். இதனால் அவர் விளையாட முடியாமல் போனதால் அவரை போல் பேட்டிங் மற்றும் மித வேகப்பந்து வீச்சாளரை தான் இந்திய அணி மாற்று வீரராக களமிறக்கி இருக்க வேண்டும்.
ஆனால் மணிக்கு 140 கிமீ வேகத்தில் பந்துவீசும் பாஸ்ட் பவுலரான ஹர்ஷித் ராணாவை இந்திய அணி களமிறக்கியதற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ''ஷிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை களமிறக்கயதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இது தொடர்பாக மேட்ச் ரெப்ரி ஜவகல் ஸ்ரீநாத்திடம விளக்கம் கேட்போம்'' என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்தார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
இந்நிலையில், ஷிவம் துபேவுக்கு பதில் ஹர்ஷித் ராணாவை களமிறக்கியது தவறு என்று முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசிய அவர், ''ஷிவம் துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை இந்திய அணி களமிறக்கியது நியாயமே இல்லை. பிளேயிங் லெவனில் உள்ள ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டால், பிளேயிங் லெவனில் உள்ள மற்றொரு வீரரை தான் மாற்று வீரராக களமிறக்க வேண்டும். வெளியில் இருக்கும் ஒரு வீரரை களமிறக்குவது தவறு'' என்றார்.
தொடர்ந்து பேசிய அஸ்வின், ''ஷிவம் துபேவுக்கு நிகராக ரமன்தீப் சிங் அணியில் இருக்கும் நிலையில், அவரை தான் மாற்று வீரராக கொண்டு வந்திருக்க வேண்டும். இந்திய அணி ஹர்ஷித் ராணாவை கேட்கும்போது நடுவர் அனுமதி மறுத்திருக்க வேண்டும். பின்னாளில் இது நமக்கே வினையாக முடியலாம். ஆகவே மாற்று வீரர் விஷயத்தில் ஒரு தெளிவான விதியை ஐசிசி கொண்டு வர வேண்டும்'' என தெரிவித்தார்.
சச்சின், பும்ரா, அஸ்வினுக்கு விருதுகள்; பிசிசிஐ விருது பெற்றவர்கள் முழு லிஸ்ட் இதோ!