ஏன் பார்டர் கவாஸ்கர் டிராபி முக்கியம்: இதுவரையில் நடந்த டிராபி தொடரில் என்னென்ன சம்பவங்கள் நடந்தது?

First Published Feb 4, 2023, 12:01 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டி வரும் 9 ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. 

சுனில் கவாஸ்கர்:

கடந்த 1981 ஆம் ஆண்டு நடந்த போட்டியின் போது பேட்டிங் செய்து கொண்டிருந்த சுனில் கவாஸ்கரை, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லி எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். ஆனால், பந்து பேட்டில் பட்டது என்பதில் சுனில் கவாஸ்கர் திட்டவட்டமாக இருந்த நிலையில், நடுவரின் தவறான முடிவால் கோபத்துடன் வெளியேறினார். அப்போது, டென்னிஸ் லில்லி வம்பிழுக்கும் வகையில் எதை எதையோ சொல்ல, ஆத்திரமடைந்த சுனில் கவாஸ்கர் தனது பார்ட்னரையும் அழைத்துக் கொண்டு வெளியேறினார். அதன் பிறகு சமாதானம் செய்து வைத்து பின்னர் போட்டி மீண்டும் தொடர்ந்தது. 
 

விராட் கோலி:

கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த போட்டியின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த விராட் கோலி ஆஸ்திரேலிய ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த கோலி, நடுவிரலை காட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

ஸ்டீவ் ஸ்மித்:

கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியா வந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது உமேஷ் யாதவ் ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் தனது விக்கெட்டில் சந்தேகம் இருப்பதாக கூறி வெளியிலுள்ள சக வீரர்களிடம் டிஆர்எஸ் எடுக்கலாமா என்று கேட்டார். இது போட்டி விதிமுறைக்கு மீறிய செயல் என்பதால், நடுவரிடம் கூறி விராட் கோலி அவரை வெளியேறச் செய்தார்.

ஹர்பஜன் சிங்:

கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸை குரங்கு என்று விமர்சித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே, ஹர்பஜனுக்கு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. அதோடு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்தே வெளியேறுமாறு அவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்தன. அதன் பிறகு அவர் நீதிமன்றம் வரை சென்று வெற்றி பெற்று திரும்ப வந்தார். அப்போது, டர்பன் குறித்து சைமண்ட்ஸ் தன்னை கிண்டல் செய்ததால் தான் தான் அவ்வாறு செய்ததாக கூறினார்.
 

ஜஸ்ப்ரித் பும்ரா:

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிட்னியில் நடந்த டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அப்போது ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை நிறவெறி தொடர்பாக ஆஸ்திரேலிய ரசிகர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். இதன் காரணமாக இந்திய அணியை சிறிது நேரம் வெளியில் இருக்குமாறு நடுவர்கள் பரிந்துரை செய்தனர். ஆனால், கேப்டன் ரகானே அதற்கு மறுப்பு தெரிவித்து தொடர்ந்து பீல்டிங் செய்து வந்தார். இது தொடர்பாக 6 ரசிகர்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இதற்கு ரிஷப் பண்ட் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!