பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு அரசியலில் களமிறங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதற்கு முன்னதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான முகமது அசாருதீன், யூசுப் பதான், கீர்த்தி ஆசாத், சேத்தன் சவுகான், கவுதம் காம்பீர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் பலரும் அரசியலில் களமிறங்கியிருக்கின்றனர். இவர்களது வரிசையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் அதிரடி மன்னனான் வீரேந்திர சேவாக்கும் இடம் பெற்றுள்ளார். எப்படி என்றால், 5 ஆம் தேதி முதல் தீவிரமாக அரசியலில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
cricket virender sehwag
எதற்காக, ஏன் என்று முழுமையாக பார்க்கலாம். 1999 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரையில் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடியவர் அதிரடி மன்னன் வீரேந்திர சேவாக். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையை சேவாக் படைத்திக்கிறார். அதே போன்று ஒரு நாள் கிரிக்கெட்டிலும் சச்சின் டெண்டுல்கர் அடித்த 200 ரன்கள் சாதனையை சேவாக் 219 ரன்கள் குவித்து முறியடித்துள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனை இவருக்குரியது.
இப்படி பல சாதனைகளை படைத்த வீரேந்திர சேவாக் 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தான் தற்போது தீவிர அரசியலிலும் இறங்கியிருக்கிறார். ஹரியானாவில் காங்கிரஸ் வேட்பாளர் அனிருத் சவுத்ரி சார்பில் சேவாக் பிரசாரம் செய்தார். நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய சேவாக், அக்டோபர் 5 ஆம் தேதி அனிருத் சவுத்ரிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.
சேவாக்கும் அனிருத் சவுத்ரியும் மிகவும் நெருக்கமானவர்கள். அதனால் ஹரியானாவில் தோஷம் தொகுதியில் போட்டியிடும் அனிருத் சவுத்ரிக்காக சேவாக் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். பிரச்சாரத்தில் பேசிய சேவாக் கூறியிருப்பதாவது: அனிருத் சவுத்ரி எனக்கு ஒரு சகோதரர் போன்றவர். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். எனவே அனிருத் சவுத்ரியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும், தேர்தலில் வெற்றி பெற்றால் அனிருத் சவுத்ரி உங்களை ஏமாற்ற மாட்டார். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன் என்று வீரேந்திர சேவாக் மக்களுக்கு உறுதியளித்தார்.
ஹரியானா தேர்தல்:
ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அக்டோபர் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போது வீரேந்திர சேவாக்கின் பிரச்சாரத்தால், தோஷம் தொகுதியில் அனிருத் சவுத்ரி பெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதி என்று கூறப்படுகிறது. இனிவரும் நாட்களில் சேவாக்கும் அரசியலுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. களத்தில் பேட்டால் பேசி வந்த சேவாக், தற்போது வார்த்தையால் வித்தைகாட்டி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஆதலால் தோஷம் தொகுதியில் அனிருத் சவுத்ரி வெற்றி வாகை சூடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேவாக் கிரிக்கெட் வாழ்க்கை:
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சேவாக் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்தியாவுக்காக 374 சர்வதேச போட்டிகளில் விளையாடி 38 சதங்களுடன் 17,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.