
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுதோல்வி அடைந்ததால் இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக பேட்டிங்கில் சொதப்பிய விராட் கோலி, பேட்டிங் மற்றும் கேப்டன்சியில் சொதப்பிய ரோகித் சர்மா மீது ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் பாயந்தனர். இந்த தோல்வியைதொடர்ந்து இளம் வீரர்கள் மட்டுமின்றி இந்திய அணியின் மூத்த வீரர்கள் அனைவரும் ரஞ்சி டிராபி உள்ளிட்ட உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என பிசிசிஐ உத்தரவிட்டது.
இதனால் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் ரஞ்சி கிரிக்கெட்டில் களமிறங்கினார்கள். சில நாட்களுக்கு முன்பு மும்பை அணிக்காக விளையாடிய விளையாடிய ரோகித் சர்மா ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்சில் 3, இரண்டாவது இன்னிங்சில் 28 என மீண்டும் பேட்டிங்கில் சொதப்பினார். இதேபோல் விராட் கோலி சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஞ்சி டிராபியில் களமிறங்கினார்.
டெல்லி அணிக்காக விளையாடும் அவர் ரயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று உள்ளூர் கிரிக்கெட்டில் களமிறங்கியதால் அவரை காண பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்தனர். உள்ளூர் கிரிக்கெட்டின்போது எப்போதும் வெறிச்சோடி காணப்படும் டெல்லி மைதானம் நேற்று ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.
அதுமட்டுமின்றி விராட் கோலி விளையாடியதால் இந்த போட்டியும் முதன் முறையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. விராட் கோலி மைதானத்துக்குள் வந்தபோதும், அவர் பீல்டிங் செய்தபோதும் ரசிகர்கள் கோஷம் எழுப்பி உற்சாகத்தில் திளைத்தனர்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ரயில்வேஸ் அணி முதல் இன்னிங்சில் 241 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து டெல்லி அணி பேட்டிங்கை தொடங்கிய நிலையில், விராட் கோலி எப்போது பேட்டிங் செய்ய வருவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
IND vs ENG 4th T20: புது சாதனை படைக்கும் SKY; சாதகமான புனே பிட்ச்; இந்தியாவுக்கு கப்பு கன்பார்ம்!
டெல்லி வீரர் யாஷ் துல் 32 ரன்னில் 2வது விக்கெட்டாக வீழ்ந்த பிறகு, 3வது விக்கெட்டுக்கு பேட்டுடன் களமிறங்கினார் விராட் கோலி. அப்போது மைதானத்தில் திரண்டிருந்த பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ''கோலி.., கோலி... கோலி...'' என உற்சாகமாக முழக்கமிட்டு ஆரவாரத்தில் திளைத்தனர். தடுப்பாட்டத்தை கையில் எடுத்த விராட் கோலி, பாஸ்ட் பவுலர் ஹிமான்ஷு சங்வான் ஓவரில் கவர் டிரைவர் மூலம் சூப்பர் பவுண்டரி ஒன்று விளாசினார். இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் உற்காசத்தின் உச்சிக்கே சென்றனர்.
ஆனால் ரசிகர்களின் இந்த ஆரவாரம் ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை. பவுண்டரி அடித்த அடுத்த பந்திலேயே விராட் கோலி க்ளீன் போல்டானார். இதனால் ஆராவாரமிட்ட டெல்லி மைதானம் நிசப்தமானது. அதாவது ஹிமான்ஷு சங்வான் வீசிய லெந்த் பந்தை விராட் கோலி கவர் டிரைவ் அடிக்க முயற்சி செய்தபோது, பந்து பேட்டை ஏமாற்றி ஸ்டெம்ப் மீது தாக்கியது. பந்தில் அதிவேகத்தால் ஆப் ஸ்டெம்பு புடிங்கி எறியப்பட்டு பல்டி அடித்தது.
மொத்தம் 15 பந்துகளை மட்டுமே சந்தித்த கோலி, ஒரு பவுண்டரியுடன் 6 ரன்னில் வெளியேறினார். விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை பவுலர் ஹிமான்ஷு சங்வான் மற்றும் ரயில்வேஸ் அணி வீரர்கள் துள்ளிக்குதித்து கொண்டாடினார்கள்.
ஆனால் டெல்லி மைதானம் மயான அமைதியானது. ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பிய விராட் கோலி, ரஞ்சி டிராபியில் கண்டிப்பாக அசத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கோலி வெறும் 6 ரன்னில் அவுட் ஆனதால் ரசிகர்கள் நொந்து போனார்கள்.
இந்தியாவுக்காக சாம்பியன்ஸ் டிராபி பாரம்பரிய நிகழ்வை ரத்து செய்த ஐசிசி; புலம்பும் பாகிஸ்தான்!