
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 19 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில், 2 போட்டியிலும் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அதுமட்டுமின்றி பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி புதிய வரலாற்று சாதனையை படைத்தது.
அதே உத்வேகத்துடன் இந்தியா வரும் வங்கதேச அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் கூட வரலாற்று சாதனையை படைக்கும். ஏனென்றால், இதற்கு முன்னதாக இரு அணிகளும் தலா 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா 11 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 2 போட்டி டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டியில் கூட வங்கதேசம் வெற்றி பெறவில்லை.
ஆதலால், ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் வரலாற்று வெற்றியை வங்கதேசம் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டெஸ்ட் தொடர் மூலமாக 8 மாதங்களுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட இருக்கும் விராட் கோலி பல சாதனைகளை முறியடிக்க இருக்கிறார்.
எது என்னென்ன என்று பார்ப்பதற்கு முன், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி இடம் பெற்று விளையாடினார்.
எஞ்சிய 2 போட்டிகளில் குடும்ப சூழல் காரணமாக விலகினார். தற்போது வங்கதேச தொடர் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார். இந்த தொடர் மூலமாக கோலி 4 முக்கியமான சாதனைகளை முறியடிக்க இருக்கிறார். அதைப் பற்றி பார்க்கலாம் வாங்க..
30 சதங்கள்:
சர்வதேச கிரிக்கெட்டில் 80 சதங்களை பதிவு செய்துள்ள விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்கள் விளாசியுள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் பிராட்மேனின் 30 சதங்கள் சாதனையை சமன் செய்வார்.
9000 ரன்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,848 ரன்கள் அடித்துள்ள விராட் கோலி வங்கதேசத்திற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 152 ரன்கள் அடித்தால் 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். அதோடு, இங்கிலாந்தின் கிரஹாம் கூச்சின் 8900 ரன்கள் சாதனையை முறியடிப்பார்.
அரைசதம்:
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. வரும் 19 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் அடித்தால் 30 அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
சட்டேஷ்வர் புஜாரா
வங்கதேச அணிக்கு எதிராக 32 ரன்கள் எடுத்தால் சட்டேஷ்வர் புஜாராவின் 468 ரன்கள் சாதனையை முறியடிப்பார். இதுவரையில் வங்கதேச அணிக்கு எதிராக புஜாரா 437 ரன்கள் எடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக விராட் கோலி 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். அதில் முக்கியமானது, ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்துள்ளார். விராட் கோலியின் இந்த 50 சதங்கள் சாதனையை எந்த வீரராலும் முறியடிக்க முடியாது.
உலகக் கோப்பையில் அதிக ரன்கள்:
2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் விராட் கோலி 11 போட்டிகளில் விளையாடி 765 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கு முன்னதாக 2003 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 673 ரன்கள் எடுத்தார். இந்த சாதனையை விராட் கோலி 765 ரன்கள் எடுத்து முறியடித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்:
ஐபிஎல் தொடரில் விராட் கோலி கிங் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார்.2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் 973 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். விராட் கோலிக்கு பிறகு 890 ரன்களுடன் சுப்மன் கில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் 2ஆவது இடத்தில் இருக்கிறார்.
21 முறை தொடர் நாயகன் விருது
ஒருநாள் கிரிக்கெட், டி20 மற்றும் ரெட் பால் கிரிக்கெட்டான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 11, டெஸ்டில் 3 மற்றும் டி20 போட்டிகளில் 7 என 21 முறை தொடர் நாயகன் விருதுகளை கோலி வென்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர் 20 முறை தொடர் நாயகன் விருது வென்றுள்ளார்.
கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் 2ஆவது பேட்டிங் செய்து தனது அசாத்திய சாதனையுடன் பல ஆண்டுகளாக 'சேஸ் மாஸ்டர்' பட்டத்தை சொந்தமாக்கியுள்ளார். கோலி சேஸிங்கில் மட்டும் 27 சதங்கள் அடித்து 50 ஓவர் வடிவத்தில் சிறந்த சேஸர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கோலிக்கு பிறகு டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் சேஸிங் செய்யும் போது 17 சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.