Virat Kohli Net Session
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக சேப்பாக்கத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வரும் விராட் கோலி சிக்ஸர் அடித்து சேப்பாக்கத்தின் ஒரு பகுதியில் உள்ள சுவரை அடித்து நொறுக்கிய வீடியோ தான் இன்றைய தலைப்புச் செய்தி.
சேப்பாக்கம் சுவரை உடைத்த விராட் கோலி - வீடியோ!
விராட் கோலி 8 மாதங்களுக்கு பிறகு ரெட் பால் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளார். கடைசியாக இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று விளையாடினார். இதைத் தொடர்ந்து ஒயிட் பால் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த விராட் கோலி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதைத் தொடர்ந்து டிராபி வென்ற மகிழ்ச்சி சிறிது நேரம் நீடிப்பதற்குள்ளாக சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
Virat Kohli Practice
இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம் பெற்று விளையாடினார். ஆனால், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்று இந்திய அணி இழந்தது. இந்த நிலையில் தான் வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 19 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டிக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதில், விராட் கோலியும் இடம் பெற்றிருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சேப்பாக்கம் வந்த இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அதில், விராட் கோலியும் சாதனையை நோக்கி பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தான் இன்றைய பயிற்சியின் போது விராட் கோலி சிக்ஸர் பறக்கவிட்ட பந்து ஒன்று சேப்பாக்கத்தின் சுவரை அடித்து நொறுக்கியுள்ளது.
Virat Kohli Practice
விராட் கோலி அடித்த சிக்ஸர் பந்து சேப்பாக்கத்தில் இந்திய அணி வீரர்களின் டிரெஸிங் ரூமிற்கு அருகிலுள்ள ஒரு பகுதி சுவரையே சேதமடையச் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் 35 வயதான விராட் கோலி வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது சாதிக்க காத்திருக்கும் சாதனைகள் பட்டியல் பற்றி பார்க்கலாம் வாங்க…
30 சதங்கள்:
சர்வதேச கிரிக்கெட்டில் 80 சதங்களை பதிவு செய்துள்ள விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29 சதங்கள் விளாசியுள்ளார். இன்னும் ஒரு சதம் அடித்தால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டான் பிராட்மேனின் 30 சதங்கள் சாதனையை சமன் செய்வார்.
Virat Kohli Test Records
9000 ரன்கள்
டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,848 ரன்கள் அடித்துள்ள விராட் கோலி வங்கதேசத்திற்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 152 ரன்கள் அடித்தால் 9000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார். அதோடு, இங்கிலாந்தின் கிரஹாம் கூச்சின் 8900 ரன்கள் சாதனையை முறியடிப்பார்.
அரைசதம்:
வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. வரும் 19 ஆம் தேதி தொடங்கும் டெஸ்ட் போட்டியில் ஒரு அரைசதம் அடித்தால் 30 அரைசதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
Virat Kohli Cricket Career
சட்டேஷ்வர் புஜாரா
வங்கதேச அணிக்கு எதிராக 32 ரன்கள் எடுத்தால் சட்டேஷ்வர் புஜாராவின் 468 ரன்கள் சாதனையை முறியடிப்பார். இதுவரையில் வங்கதேச அணிக்கு எதிராக புஜாரா 437 ரன்கள் எடுத்துள்ளார்.
இதற்கு முன்னதாக விராட் கோலி 16 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ளார். அதில் முக்கியமானது, ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்து சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையை முறியடித்துள்ளார். விராட் கோலியின் இந்த 50 சதங்கள் சாதனையை எந்த வீரராலும் முறியடிக்க முடியாது.
Virat Kohli Records
இரு அணிகளும் மோதிய 13 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தான் 11 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. 2 போட்டி டையில் முடிந்துள்ளது. இதுவரையில் ஒரு வெற்றி கூட பெறாத வங்கதேசம் வரலாற்று வெற்றியை நோக்கி 19ஆம் தேதி களமிறங்குகிறது. ஆனால், இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் தோல்வியை விட அதிக வெற்றிகளை பெற்ற 4ஆவது அணி என்ற சாதனையை இந்தியா படைக்கும்.
இதுவரையில் 579 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ள இந்திய அணி 178 வெற்றியும், 178 தோல்வியும் கண்டுள்ளது. 222 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டி டை செய்யப்பட்டுள்ளது.