
Top 5 Most Expensive Retained Players in Mumbai Indians: மும்பை இந்தியன்ஸ் தக்கவைப்பு மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. 5 முறை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2025 சீசனுக்காக மெகா ஏலத்திற்கு முன்பு தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இந்திய அணி டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா, இளம் வீரர் திலக் வர்மா மற்றும் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவைத் தக்கவைத்துள்ளது.
எதிர்பார்த்தபடி, இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு மும்பை இந்தியன்ஸ் முதலிடம் கொடுத்துள்ளது. பும்ரா ரூ. 18 கோடியுடன் முதலிடத்தில் தக்கவைக்கப்பட்டுள்ளார், ஹர்திக் பாண்டியா, மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா ரூ. 16.35 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மா மட்டும் அவர்களை விட ரூ.5 லட்சம் குறைவாக ரூ.16.30 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். இளம் வீரர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் திலக் வர்மாவை ரூ. 8 கோடியுடன் தக்கவைத்துள்ளது.
இதற்கு முன்னதாக ரோகித் சர்மா ரூ.16 கோடிக்கும், ஜஸ்ப்ரித் பும்ரா ரூ.12 கோடிக்கும், ஹர்திக் பாண்டியா ரூ.15 கோடிக்கும், திலக் வர்மா ரூ.1.70 கோடிக்கும், சூர்யகுமார் யாதவ் ரூ.8 கோடிக்கும் விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வான்கடே மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான 17வது சீசனில் அவர்களின் கடைசி லீக் போட்டியில் ரோகித் தனது கடைசி போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார் என்ற பேச்சு எழுந்தது.
வரும் சீசனில் ரோகித் சர்மா மும்பை அணிக்காக இல்லாமல் வேறு அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் இல்லாமல் மும்பை இந்தியன்ஸ் ரோகித் சர்மாவைத் தக்கவைத்துள்ளது. மும்பை அணி 'ஹிட்மேன்' வேறு அணிக்குச் செல்லாமல் தங்கள் அணியிலேயே தொடர வேண்டும் என்று முடிவு செய்துள்ளது.
இருப்பினும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் இஷான் கிஷனுக்கு மும்பை அணி அதிர்ச்சி அளித்துள்ளது. ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு இஷான் கிஷன் விடுவிக்கப்பட்டார். 2022 இல் கூட இஷானை விடுவித்த மும்பை அணி அவரை ரூ. 15.25 கோடிக்கு மீண்டும் வாங்கியது. மீண்டும் இப்போது அவரை விடுவித்துள்ளது.
அதேபோல், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டிம் டேவிட், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் நேஹல் வதேரா ஆகியோரும் ஏலத்தில் மீண்டும் வருகின்றனர். இருப்பினும், அவர்களில் ஒருவரை ரைட் டு மேட்ச் (RTM) கார்டைப் பயன்படுத்தி தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
மும்பை இந்தியன்ஸ் தக்கவைத்த வீரர்களின் பட்டியல் இதோ
ஜஸ்பிரித் பும்ரா (ரூ. 18 கோடி)
ஹர்திக் பாண்டியா (கே) (ரூ. 16.35 கோடி)
சூர்யகுமார் யாதவ் (ரூ. 16.35 கோடி)
ரோகித் சர்மா (ரூ. 16.3 கோடி)
திலக் வர்மா (ரூ. 8 கோடி).
மும்பை இந்தியன்ஸ் விடுவித்த வீரர்களின் பட்டியல் இதோ
டெவால்ட் ப்ரீவிஸ், இஷான் கிஷன், டிம் டேவிட், ஹர்விக் தேசாய், அர்ஜுன் டெண்டுல்கர், ஷாம்ஸ் முலானி, நேஹல் வதேரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், லூக் வுட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜெரால்ட் கோயட்ஸி, ஸ்ரேயாஸ் கோபால், நமன் தீர், அன்ஷுல் காம்போஜ், முகமது நபி, சிவாலிக் சர்மா, க்வேனா மஃபகா.
இந்த தக்கவைப்பு பட்டியல் மூலமாக மும்பை இந்தியன்ஸ் ரூ.75 கோடியை செலவு செய்துள்ளது. மீதம் ரூ.45 கோடியை மட்டுமே மெகா ஏலத்திற்கு மும்பை இந்தியன்ஸ் பயன்படுத்திக் கொள்ளும்.
மும்பை கேப்டன் யார்? ஹர்திக் பாண்டியாவா? அல்லது புதிய கேப்டனா?
கடந்த ஐபிஎல் சீசனுக்கு முன்பு ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்தார். இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அவரை அதே விலைக்கு அந்த அணியிலிருந்து டிரேட் செய்தது. மேலும், ரோகித் சர்மாவை நீக்கி ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியைக் கொடுத்தது. இருப்பினும், மும்பை எதிர்பார்த்தபடி ஹர்திக் தலைமையில் மும்பை ஐபிஎல் 2024 இல் சிறப்பாகச் செயல்படவில்லை. புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது.
ஹர்திக் அறிமுக கேப்டன் சீசனில் அணி கடைசி இடத்தைப் பிடித்ததால் கேப்டனாக யார் இருப்பார் என்ற சந்தேகங்கள் உள்ளன. சூர்யகுமார் யாதவ் இந்திய டி20 கேப்டன். தற்போது இந்திய டி20 அணிக்கு கேப்டனாக இருக்கும் ஸ்கை ஐபிஎல் அணிக்கும் கேப்டனாக இருக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் ரோகித் மீண்டும் தலைமைப் பொறுப்பேற்பதையும் நிராகரிக்க முடியாது.