Ravichandran Ashwin Fined 30 Percent for TNPL Match
கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டியின் போது, கள நடுவரின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்ததற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு போட்டிக் கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆர். சாய் கிஷோர் வீசிய பந்து லெக்-ஸ்டம்பிற்கு வெளியே விழுந்ததாகத் தோன்றினாலும், எல்பிடபிள்யூ என்று தீர்ப்பளித்த நடுவர் கிருத்திகாவின் முடிவில் அஸ்வின் மகிழ்ச்சியடையவில்லை.
24
அஸ்வினுக்கு தவறான அவுட் கொடுத்த நடுவர்
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வழிநடத்தும் அஸ்வின், திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோதலில் சாய் கிஷோரின் பந்தை ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றபோது, பந்து அவரது பேடுகளைத் தாக்கியது, ஃபீல்டிங் தரப்பிலிருந்து கடுமையான முறையீட்டைத் தொடர்ந்து நடுவர் தனது விரலை உயர்த்தி அவுட் என அறிவித்தார்.
அஸ்வினுக்கு இது அவுட் இல்லை என தெரிந்தாலும் அவர் டிஆர்எஸ் செய்ய வாய்ப்பில்லை. ஏனெனில் வைட்-பால் அழைப்புகளுக்கான இரண்டு டிஆர்எஸ்களையும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீணடித்து இருந்தது.
34
கிளஸ்வுகளை தூக்கி எறிந்த அஸ்வின்
நடுவரின் முடிவால் ஆத்திரம் அடைந்த அஸ்வின், பேட்டால் தனது பேடுகளை ஓங்கி அடித்ததுடன் கிளஸ்வுகளையும் தூக்கி எறிந்து விட்டு ஆவேசமாக சென்றார். ரவிச்சந்திரன் அஸ்வினின் இந்த நடவடிக்கை விதிகளை மீறிய செயல் என்பதால் அவருக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
''போட்டிக்குப் பிறகு போட்டி நடுவரால் விசாரணை நடத்தப்பட்டது. நடுவர்களுக்கு எதிராக கருத்து வேறுபாடு காட்டியதற்காக அஸ்வினுக்கு 10 சதவீதமும், உபகரணங்களை தவறாகப் பயன்படுத்தியதற்காக 20 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டது. அவர் தடைகளை ஏற்றுக்கொண்டார்" என்று TNPL அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அஸ்வின் கடும் கோபம் கொண்ட இந்த ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி படுதோல்வியைத் தழுவியது. அதாவது இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் வெறும் 93 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு எளிய இலக்கை துரத்திய திருப்பூர் தமிழன்ஸ் அணி 12 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம்
இந்திய அணியில் நீண்ட காலம் விளையாடிய அஸ்வினின் செயலுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். டிஎன்பிஎல் போன்ற சிறிய லீக்கில் இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அஸ்வின் இப்படி செய்திருக்கக் கூடாது என்றும் அதுவும் பெண் நடுவரிடம் அஸ்வின் தனது ஆக்ரோஷத்தை காட்டியிருக்கக் கூடாது எனவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இப்போது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.