இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருப்பதால் 1-1 என சமனில் உள்ளது. தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை(பிப்ரவரி 1) நடக்கிறது.
இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படலாம். ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரருக்கான இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்ட ஷுப்மன் கில்லின் டி20 ஸ்டிரைக் ரேட் எப்போதுமே கேள்விக்குறியாக இருந்துவந்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக ஆடும் கில், டி20 கிரிக்கெட்டில் அந்தளவிற்கு சோபிக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து, நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடிவரும் ஷுப்மன் கில்லை புறக்கணிக்க முடியாது என்பதால் டி20 தொடரிலும் அவர் களமிறக்கப்பட்டார்.
ஆனால் முதலிரண்டு போட்டிகளிலுமே ஷுப்மன் கில் சோபிக்கவில்லை. அதேவேளையில், அதிரடியாக ஆடக்கூடிய மிகத்திறமையான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா பென்ச்சில் இருக்கிறார். முதல் போட்டியிலேயே அவரை ஆடவைக்காதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. எனவே ஷுப்மன் கில்லுக்கு பதிலாக இந்த போட்டியில் பிரித்வி ஷா களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச இந்திய அணி:
பிரித்வி ஷா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்.