
அகமதாபாத்தில் நடந்த T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பையைத் தக்கவைத்து வரலாறு படைத்தது. இந்தத் தொடரில் பல வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவர்களில் சிறந்த வீரர்களைக் கொண்டு ஐசிசி கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ஜாம்பவான்களான இயன் பிஷப், இயான் மோர்கன், நடாலி ஜெர்மானோஸ் மற்றும் ஐசிசி பிரதிநிதி கௌரவ் சக்சேனா, பத்திரிகையாளர் ரெக்ஸ் கிளெமென்டைன் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு இந்த வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது. இதில் இந்தியா தரப்பில் சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 4 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ஐசிசி கனவு அணி இதோ: சாகிப்சதா ஃபர்ஹான், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், எய்டன் மார்க்ரம், ஹர்திக் பாண்டியா, வில் ஜாக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஜஸ்பிரித் பும்ரா, லுங்கி என்கிடி, ஆதில் ரஷித், பிளெசிங் முசரபானி மற்றும் ஷேட்லி வான் ஷால்க்விக்.
இந்த பட்டியலில் இடம்பிடித்த இந்திய வீரர்கள் டி20 உலகக்கோப்பையில் என்ன செயல்திறனை வெளிப்படுத்தினார்கள் என்பது குறித்து பார்ப்போம்.
5 போட்டிகள், 321 ரன்கள், 80.25 சராசரி, 199.37 ஸ்ட்ரைக் ரேட்
இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றிக்கு சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் முக்கிய காரணம். அதனாலேயே, இவர் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆரம்பத்தில் இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்தாலும், முக்கியமான கடைசி கட்டப் போட்டிகளில் பட்டையைக் கிளப்பினார்.
சூப்பர் 8 சுற்றின் கடைசிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 97 ரன்கள், அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்கள், இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் என மிரட்டினார்.
இதன் மூலம், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி இரண்டிலும் அரைசதம் அடித்த மூன்றாவது வீரர் மற்றும் T20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக மூன்று 80+ ஸ்கோர்களை அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
9 போட்டிகள், 317 ரன்கள், 35.22 சராசரி, 193.29 ஸ்ட்ரைக் ரேட்.
இஷான் கிஷன் தனது தொடர்ச்சியான அதிரடி ஆட்டத்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இவர் அடித்த மூன்று அரைசதங்கள் முக்கியமானவை. ஜிம்பாப்வேக்கு எதிராக 38 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிராக 39 ரன்களும் எடுத்து அணிக்கு உதவினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவரது ஆட்டம் உச்சக்கட்டமாக இருந்தது. இந்தியா ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்த நிலையில், 40 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 77 ரன்கள் குவித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்த கிஷன், இறுதிப் போட்டியில் 54 ரன்கள் மற்றும் இரண்டு முக்கிய கேட்ச்களைப் பிடித்து தனது கம்பேக்கை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
9 போட்டிகள், 217 ரன்கள், 160.74 ஸ்ட்ரைக் ரேட், 9 விக்கெட்டுகள்
பேட்டிங் அல்லது பந்துவீச்சு என இரண்டிலும் ஆட்டத்தை மாற்றும் திறமையால், கடந்த சில ஆண்டுகளாக ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். இந்த உலகக் கோப்பையிலும் 217 ரன்கள் மற்றும் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது ஃபார்மை தொடர்ந்தார்.
இரண்டு அரைசதங்கள் அடித்த பாண்டியா, ஜிம்பாப்வேக்கு எதிராக 23 பந்துகளில் 50 ரன்கள் விளாசினார். அந்தப் போட்டியில் இந்தியா 256/4 ரன்கள் குவித்தது. இது 2026 T20 உலகக் கோப்பையின் அதிகபட்ச அணி ஸ்கோராகும்.
பந்துவீச்சில், பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது இவரது சிறந்த செயல்திறன். பாகிஸ்தான் முக்கிய வீரரான ஃபர்ஹானை டக் அவுட் ஆக்கியது குறிப்பிடத்தக்கது.
8 போட்டிகள், 14 விக்கெட்டுகள், 12.42 சராசரி, 6.21 எகானமி
இந்தியாவின் பேட்டிங் லைன்-அப் மிரட்டலாக இருந்தாலும், ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சுதான் அணியை தனித்து நிற்க வைக்கிறது. இந்த உலகக் கோப்பையிலும், சக வீரர் வருண் சக்கரவர்த்தியுடன் இணைந்து அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆனார். இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 4/15 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
சரியான நேரத்தில் விக்கெட் எடுப்பது மட்டுமல்லாமல், எதிரணியின் பேட்டிங் ரிதத்தை உடைப்பதும் பும்ராவின் சிறப்பு. இவரது யார்க்கர்கள் எதிரணிக்கு பெரும் தலைவலியாக இருந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில், அவர் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தாலும், 18-வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அந்தப் போட்டியில் இங்கிலாந்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதற்கு இதுவும் ஒரு காரணம்.