3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது. நாளை முதல் ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடக்கிறது.
ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணியின் துணை கேப்டனும் அதிரடி தொடக்க வீரருமான ரோஹித் சர்மா ஆடவில்லை. ஐபிஎல்லில் அடைந்த காயத்திலிருந்து ரோஹித் சர்மா முழுமையாக குணமடையாத நிலையில், டெஸ்ட் அணியில் எடுக்கப்பட்டிருந்த நிலையில், முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடமாட்டார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதேபோல இந்திய டெஸ்ட் அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலர் இஷாந்த் சர்மாவும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடமாட்டார்.
நாளை முதல் ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், ரோஹித் மற்றும் இஷாந்த் ஆகிய 2 சர்மாக்களையும் இந்திய அணி மிஸ் பண்ணும் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், இந்திய அணி கண்டிப்பாக 2 சர்மாக்களையும் மிஸ் பண்ணும். இஷாந்த் சர்மா கூட ஒருநாள் போட்டிகளில் ஆடுவதில்லை. ஆனால் ரோஹித் சர்மா மிகப்பெரிய வீரர். அனைத்துவிதமான போட்டிகளிலும் தொடக்க வீரரான ரோஹித் ஆடாதது கண்டிப்பாக அணிக்கு பெரும் பின்னடைவுதான். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுக்கக்கூடிய ரோஹித் சர்மா, கடந்த ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டிகளிலும் நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்துவந்த நிலையில், அவர் ஆடாதது பெரும் பின்னடைவு என்று தெரிவித்துள்ளார்.