டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சனைப் பாராட்டி, கேரள தொழிலதிபர் நிதின் பாபு தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்கினார். இதை அறிந்த சஞ்சு சாம்சன், அந்த தொழிலதிபரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் தனது சிறப்பான ஆட்டத்திற்காக ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய கேரள தொழிலதிபர் ஒருவரை நேரில் சந்தித்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, இந்திய அணி டி20 உலகக் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இதில் சஞ்சு சாம்சன் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்தார்.
சஞ்சு வெறித்தனமான பேட்டிங்
இந்த தொடரின் நாக்-அவுட் சுற்றுகளில் சஞ்சு சாம்சனின் ஆட்டம் மிக முக்கியமானதாக இருந்தது. குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான சூப்பர் 8 சுற்றின் கட்டாய வெற்றிப் போட்டியில் 97 ரன்களும், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 89 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 89 ரன்களும் அடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார்.
24
சஞ்சுவுக்காக ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய தொழிலதிபர்
சாம்சனின் இந்த அபாரமான ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட கேரளாவின் கோட்டயம், பாம்பாடியைச் சேர்ந்த நிதின் பாபு என்ற தொழிலதிபர், தனது 'ஃபியா கார்மென்ட்ஸ்' (Fia Garments) நிறுவனத்தில் பணிபுரியும் 82 ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி அசத்தினார். சூப்பர் 8 போட்டிக்கு தலா 500 ரூபாயும், அரையிறுதிக்கு 1000 ரூபாயும், இறுதிப் போட்டிக்கு 2000 ரூபாயும் என ஒவ்வொரு ஊழியருக்கும் போனஸ் கொடுத்தார். இதன் மூலம், சாம்சனின் வெற்றியைத் தனது ஊழியர்களுடன் கொண்டாட, அவர் மொத்தமாக 2.77 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளார். இது ஊழியர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
34
ஊழியர்களுக்கு போனஸ் கொடுத்த தொழிலதிபரை சந்தித்த சஞ்சு
இந்த நெகிழ்ச்சியான விஷயத்தைக் கேள்விப்பட்ட சஞ்சு சாம்சன், ஃபியா கார்மென்ட்ஸ் உரிமையாளர் நிதின் பாபுவை நேரில் சந்திக்க முடிவு செய்தார். அதன்படி சஞ்சு சாம்சன் கேரளாவின் கோட்டயம், பாம்பாடியில் உள்ள தொழில் அதிபர் நிதின் பாபுவின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்தார். அங்கு நிதின் பாபுவை நேரில் சந்தித்து, அவரது தாராள மனதுக்காக நன்றி தெரிவித்தார்.
கிரிக்கெட் வெற்றியைத் தனது ஊழியர்களுடன் கொண்டாடிய அவரது இந்த புதுமையான வழியை சாம்சன் பாராட்டினார். மேலும், நிதின் பாபு மற்றும் அவரது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திய சாம்சன், அவர்களுடன் வீட்டின் பின்புறத்தில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். அப்போது, அந்தத் தொழிலதிபர் டி20 உலகக் கோப்பை ஹீரோவான சாம்சன் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார். "என் மக்கள், என் சமூகம், அவர்களின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன். இது எப்போதும் ஆட்டத்தை விட பெரியது," என்று சாம்சன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு பதிவிட்டுள்ளார்.