சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐ தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என அவரது மேலாண்மைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 28-ம் தேதி பிசிசிஐ தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராஜீவ் சுக்லா தலைவர் பதவிக்கு முக்கிய போட்டியாளராகக் கருதப்படுகிறார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்கு சச்சின் டெண்டுல்கர் வரவிருப்பதாக பரவி வந்த வதந்திகளுக்கு அவரது மேலாண்மைக் குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வரும் செப்டம்பர் 28-ம் தேதி பிசிசிஐ தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சச்சின் அந்தப் பதவிக்கு முயற்சி செய்யவில்லை என்று சச்சினின் மேலாண்மைக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
25
சச்சின் போட்டியிடவில்லை
“திரு. சச்சின் டெண்டுல்கர், பிசிசிஐ தலைவர் பதவிக்கு பரிசீலிக்கப்படுவதாக அல்லது பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சில செய்திகளும் வதந்திகளும் பரவி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. அப்படி எந்த விதமான முயற்சியும் நடைபெறவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகிறோம்” என்று சச்சின் டெண்டுல்கரின் மேலாண்மைக் குழு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிசிசிஐயின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் வரும் செப்டம்பர் 28-ம் தேதி தலைவர், துணைத் தலைவர், செயலாளர், இணைச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக் கூட்டத்திற்கு முன், தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான பெயர்களைப் பற்றி விவாதிக்க ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெறும்.
35
முக்கிய பதவிகளுக்கான போட்டியில் யார்?
பிசிசிஐயின் அரசியலமைப்பின்படி, 70 வயதை எட்டிய நிர்வாகி ஒருவர் பதவியில் நீடிக்க முடியாது. கடந்த மாதம் 70 வயதை எட்டிய ரோஜர் பின்னி ஆகஸ்ட் மாதத்தில் தனது பதவிக் காலம் முடிந்ததை அடுத்து இடைக்காலத் தலைவராக ராஜீவ் சுக்லா பொறுப்பேற்றார்.
தற்போது, தலைவர் பதவிக்கான போட்டி தீவிரமாக உள்ளது. ஒரு முன்னாள் வீரர் மற்றும் ஒரு கிரிக்கெட் நிர்வாகி ஆகியோர் இந்த பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றனர்.
இடைக்காலத் தலைவரான ராஜீவ் சுக்லா, தலைவர் பதவிக்கான முக்கிய போட்டியாளராகக் கருதப்படுகிறார். அவர் துணைத் தலைவராக தொடர்ந்து நீடிப்பது, தலைவர் பதவிக்கு உயர்த்துவது அல்லது ஐபிஎல் தலைவராகப் பொறுப்பேற்பது என மூன்று விதமான வாய்ப்புகள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. எனினும், அவர் தற்போது வகிக்கும் பதவியிலேயே தொடர அதிக வாய்ப்புள்ளது என்றாலும், அவர் தலைவர் பதவிக்கு உயர்த்தப்படுவதற்கு 60-40 சதவீதம் வாய்ப்பு உள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரோஜர் பின்னிக்கு முன், சௌரவ் கங்குலி பிசிசிஐ தலைவர் பதவியை வகித்த கடைசி இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். கடந்த காலங்களில் சுனில் கவாஸ்கர் மற்றும் சிவ்லால் யாதவ் ஆகியோர் இடைக்காலத் தலைவர்களாக இருந்துள்ளனர்.
55
ஐபிஎல் நிர்வாக கவுன்சில்
ஐபிஎல் நிர்வாக கவுன்சிலில், முன்னாள் பிசிசிஐ பொருளாளர் அனிருத் சௌத்ரி மீண்டும் வர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஐபிஎல் நிர்வாக கவுன்சில் உறுப்பினர் அபிஷேக் டால்மியாவுக்கும் இந்தப் பதவிக்கான போட்டியில் உள்ளார். இருப்பினும், இறுதி முடிவுகள் தலைமை நிர்வாகக் கூட்டத்தில் எடுக்கப்படும் விவாதங்களின் அடிப்படையில் அமையும்.