Ruturaj Gaikwad
தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றனர். ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது 1-1 என்று சமன் செய்யப்பட்டது.
Ruturaj Gaikwad
இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்தது. இதில், இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற, 2ஆவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-1 என்று சமன் செய்த நிலையில், தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில், இந்தியா 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.
Ruturaj Gaikwad Injured
இந்த ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்திய அணியின் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 5 மற்றும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், அவர் 3ஆவது ஒருநாள் போட்டியில் இடம் பெறவில்லை. மோதிர விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இடம் பெறவில்லை என்று கூறப்பட்டது. இதன் காரணமாக அவருக்குப் பதிலாக ரஜத் படிதார் ஒருநாள் தொடரில் அறிமுகமானார்.
South Africa vs India Test Cricket
ஒருநாள் தொடரைத் தொடர்ந்து வரும் 26ஆம் தேதி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது மோதிர விரல் காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
Ruturaj Gaikwad Injured
பிசிசிஐ மருத்துவ குழு, ருதுராஜ் கெய்க்வாட்டை பரிசோதனை செய்த நிலையில், அவரது காயம் டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக குணமடைய வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது. இதையடுத்து, டெஸ்ட் தொடரிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட்டை நீக்கியதோடு, அவரை நாட்டிற்கு திரும்ப செல்லவும் பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது.
Ruturaj Gaikwad
ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் டெஸ்ட் தொடரில் இடம் பெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே முகமது ஷமி, தீபக் சாகர், இஷான் கிஷான் ஆகியோர் டெஸ்ட் தொடரிலிருந்து விலகியதைத் தொடர்ந்து தற்போது ருதுராஜ் கெய்க்வாட்டும் டெஸ்ட் தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
Ruturaj Gaikwad
தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி ஒரு முறை கூட டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இதன் காரணமாக தென் ஆப்பிரிக்கா மண்ணில் எப்படியும் டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக இந்திய அணி வீரர்கள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.