இந்தியா இங்கிலாந்து இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டி, 2ம் நாளே முடிந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி, 2ம் நாளே முடிந்தது அனைவருக்கும் வியப்பளித்தது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தினர்.
இந்திய அனியின் இடது கை ஸ்பின்னர் அக்ஸர் படேல், 11 விக்கெட்டுகளையும், சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் 7விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி கேப்டனும் ஆஃப் ஸ்பின்னருமான ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் மொத்தம் 30 விக்கெட்டுகள் விழுந்தன. அதில் 28 விக்கெட்டுகள் ஸ்பின்னர்கள் வீழ்த்தியவை.
இதையடுத்து அகமதாபாத் ஆடுகளத்தை வழக்கம்போலவே முன்னாள் வீரர்கள் பலர் விமர்சிக்க தொடங்கினர். இந்நிலையில், அகமதாபாத் ஆடுகளம் குறித்து பேச தகுதி வாய்ந்த ரோஹித் சர்மா, அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். யாருமே சரியாக ஆடாத அகமதாபாத் பிட்ச்சில் தான் ரோஹித்தும் ஆடினார். முதல் இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த(66) ரோஹித் சர்மா, 2வது இன்னிங்ஸில் 25 ரன்கள் நாட் அவுட். 2 இன்னிங்ஸ்களிலுமே நன்றாக ஆடினார் ரோஹித் சர்மா. பிட்ச் சரியில்லை என்றால் ரோஹித் மட்டும் எப்படி நன்றாக ஆடினார்? எனவே நன்றாக ஆடி ஸ்கோர் செய்வதும் செய்யாததும் பேட்ஸ்மேன்களின் கையில் தான் உள்ளது.
அதைச்சுட்டிக்காட்டித்தான் ரோஹித் பேசியுள்ளார். அகமதாபாத் ஆடுகளம் குறித்து பேசிய ரோஹித் சர்மா, பிட்ச் மோசமான பிட்ச்செல்லாம் இல்லை. பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் நேராக வந்த பந்துக்குத்தான் ஆட்டமிழந்தனர். ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்களும் தான் தவறிழைத்தோம். ஆனால் பிட்ச் மோசமானதல்ல. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பேட்டிங் ஆட சிறந்த பிட்ச் இது. பேட்ஸ்மேன்களால் ஸ்கோர் செய்ய முடிந்ததையும் நாம் பார்த்தோம். கவனக்குவிப்புத்தான் இந்த ஆடுகளத்தில் முக்கியம் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.