ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று திடீரென அறிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அஸ்வின், ''ஒவ்வொரு முடிவிலும் ஒரு புதிய துவக்கம் இருக்கும் என்று சொல்வார்கள். ஒரு ஐபிஎல் கிரிக்கெட் வீரராக எனது பயணம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், பல்வேறு லீக்குகளில் விளையாடும் எனது பயணம் இன்று தொடங்குகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
24
ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வு
மேலும் அஸ்வின் தனது பதிவில், ''பல ஆண்டுகளாக எனக்கு அற்புதமான நினைவுகளையும் உறவுகளையும் கொடுத்த அனைத்து அணிகளுக்கும், எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவரை எனக்கு ஆதரவளித்த ஐபிஎல் மற்றும் பிசிசிஐ-க்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். எதிர்காலத்தை ரசிக்கவும், அதில் சிறந்து செயல்படவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2024 சீசனில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய அஸ்வின் திடீரென ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
34
அஸ்வினின் ஐபிஎல் பயணம்
ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ஐபிஎல் கேரியரில் முதன் முதலாக 2009ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்தார். தொடக்க காலத்தில் சிஎஸ்கே அணியில் முக்கிய வீரராக இருந்த அஸ்வின், அந்த அணி 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக விளங்கினார். 2016ம் ஆண்டு ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பிறகு 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்தார்.
பின்பு 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக களம் கண்டார். 2022 முதல் 2024 வரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக. 2025ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பினார். சிஎஸ்கேவில் தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கிய அஸ்வின் சிஎஸ்கேவிலேயே தனது பயணத்தை முடித்துள்ளார். ஐபிஎல்லில் 221 ஆட்டங்களில் விளையாடியுள்ள அஸ்வின் 7.20 எகானமி ரேட்டில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 4/34 ஆகும். பேட்டிங்கில் ஒரு அரைசதத்துடன் 833 ரன்கள் எடுத்துள்ளார்.