இந்திய அணி 2 உலக கோப்பையை ஜெயிக்க முடியாம போனதுக்கு ஹர்திக் பாண்டியா தான் காரணம் - ரவி சாஸ்திரி

First Published Jul 25, 2022, 8:23 PM IST

இந்திய அணி 2019 ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2021 டி20 உலக கோப்பை ஆகிய 2 உலக கோப்பைகளையும் வெல்ல முடியாமல் போனதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
 

இந்திய அணி கடைசியாக 2013ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. அதன்பின்னர் ஒரு ஐசிசி டிராபியை கூட ஜெயிக்கவில்லை. விராட் கோலியின் கேப்டன்சி மற்றும் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் வழிகாட்டுதலில் இந்திய அணி மீது 2019 ஒருநாள் உலக கோப்பை மற்றும் 2021 டி20 உலக கோப்பை தொடர்களில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் இந்திய அணி அந்த 2 உலக கோப்பைகளிலும் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது. ரவி சாஸ்திரியின் பயிற்சி காலக்கட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. வெளிநாடுகளில் டெஸ்ட் தொடர்களை வென்று அசத்தியது.

ஆனால் ரவி சாஸ்திரியின் பயிற்சி காலத்தில் ஐசிசி கோப்பையை ஜெயிக்கவில்லை என்பது மட்டுமே குறை. ரவி சாஸ்திரியின் பயிற்சியாளர் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், ராகுல் டிராவிட் இப்போது பயிற்சியாளராக செயல்பட்டுவருகிறார்.
 

இந்நிலையில், இந்திய அணி அந்த 2 உலக கோப்பைகளையும் ஜெயிக்க முடியாமல் போனதற்கான காரணம்  குறித்து ரவி சாஸ்திரி கருத்து கூறியுள்ளார்.
 

இதுகுறித்து பேசிய ரவி சாஸ்திரி, டாப் 6-ல் பவுலிங் வீசத்தெரிந்த ஒரு வீரர் அணியில் கண்டிப்பாக தேவை என நினைப்பவன் நான். ஹர்திக் பாண்டியா காயம் தான் பெரிய பிரச்னையாக அமைந்துவிட்டது. 2 உலக கோப்பைகளிலும் இந்திய அணியின் தோல்விக்கு அதுதான் காரணமாக அமைந்துவிட்டது. ஹர்திக் பாண்டியா ஆடாததால் டாப் 6 வீரர்களில் பந்துவீசத்தெரிந்த வீரர் இல்லாததுதான் தோல்விக்கு காரணம். தேர்வாளர்களிடம் அப்படியான ஒரு வீரரை அடையாளம் கண்டு எடுக்கச் சொன்னேன். ஆனால் அப்படி ஒரு வீரர் யாரும் இல்லை என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

2019 ஒருநாள் உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா ஆடவில்லை. அவருக்கு மாற்றாகத்தான், 3டி பிளேயர் என்று விஜய் சங்கரை எடுத்தனர். ஆனால் அவர் சோபிக்காததுடன் பாதி தொடரில் காயத்தால் வெளியேறினார். 2021 டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா ஆடினாலும், அவரால் அவரது முழு பவுலிங் கோட்டாவையும் வீசமுடியவில்லை.
 

click me!