2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர், உலகின் மிகப்பெரிய டி20 லீக் தொடராக திகழ்கிறது. ஐபிஎல் தொடரின் மூலம் நிறைய வீரர்கள் சர்வதேச கிரிக்கெட் அணிகளில் இடம்பிடித்திருக்கின்றனர். திறமையான இளம் வீரர்களுக்கு தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கான பிளாட்ஃபார்மாக ஐபிஎல் திகழ்ந்துவருகிறது.
ரெய்னா, பும்ரா, ஹர்திக் பாண்டியா உட்பட மிகச்சிறந்த வீரர்கள் ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தித்தான் இந்திய அணியில் இடம்பிடித்தனர். இந்திய வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களுக்கும் அவரவர் அணிகளில் இடம்பிடிக்க ஐபிஎல் உதவியிருக்கிறது. இளம் திறமைகளை அடையாளப்படுத்துவது முதலிடம் வகிப்பது ஐபிஎல்.
அந்தவகையில், ஐபிஎல்லிலிருந்து மற்றொரு அருமையான வீரர் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறார். கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமாகி, கடந்த சீசனில் மும்பை அணி சொதப்பியபோது தனி நபராக ஜொலித்தவர் திலக் வர்மா. 20 வயது இளம் இடது கை பேட்ஸ்மேனான திலக் வர்மா, இந்த சீசனிலும் அபாரமாக பேட்டிங் ஆடி அனைவரையும் கவர்ந்துவருகிறார். இந்த சீசனில் 6 போட்டிகளில் 156 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 217 ரன்கள் அடித்துள்ளார். இவர் விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று ரோஹித் சர்மா தெரிவித்திருந்த நிலையில், ரவி சாஸ்திரியும் அதே கருத்தை கூறியுள்ளார்.
திலக் வர்மா குறித்து பேசிய ரவி சாஸ்திரி, ஸ்டாண்ட் அவுட் பிளேயர் திலக் வர்மா. கூடிய விரைவில் திலக் வர்மா இந்திய அணியில் இடம்பிடிப்பார். இந்திய அணியின் கதவை பலமாக தட்டுகிறார். ஆல்ரவுண்ட் திறமைசாலியாக இருக்கிறார். வெறும் ஃபினிஷர் ரோல் மட்டும் செய்வதில்லை. ஆட்டத்தின் எந்த சூழலிலும் இறங்கி ஆடுகிறார். திலக் வர்மா பேட்டிங் ஆடுவதில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், அவர் களத்திற்கு வந்ததும் ஆடும் முதல் 10 பந்துகள்.. பயமே இல்லாமல், செட்டில் ஆகவேண்டும் என்றெல்லாம் நினைக்காமல் வந்தவுடனே அடித்து ஆடுகிறார் என்றார் ரவி சாஸ்திரி.