பழசை மறக்காத தமிழர்களின் அடையாளம் நடராஜன்..!

First Published Dec 11, 2020, 9:18 PM IST

யார்க்கர் மன்னன் நடராஜன், தனது பவுலிங்கால் மட்டுமல்லாது பழையதை மறக்காத தனது பண்புகளாலும் சர்வதேச அளவில் அனைவரையும் கவர்ந்துள்ளார்.
 

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி என்ற சிறிய கிராமத்தில், சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைக்குடும்பத்தில் பிறந்து, தனது திறமையின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து, டி.என்.பி.எல், ஐபிஎல் என படிப்படியாக வளர்ந்து, இன்றைக்கு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே அலறவிடும் அளவுக்கு உயர்ந்துள்ளார், இடது கை ஃபாஸ்ட் பவுலர் டி.நடராஜன்.
undefined
தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் தனது துல்லியமான யார்க்கர்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அதன்மூலம் ஐபிஎல்லில் வாய்ப்பை பெற்றார் நடராஜன். 2017ம் ஆண்டு ஐபிஎல்லிலேயே அவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் எடுத்தார் சேவாக். ஆனால் காயத்தால் அந்த சீசனில் முழுமையாக ஆடமுடியாத நடராஜன், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடியபோது, தனது துல்லியமான யார்க்கர்கள் மற்றும் கட்டர்கள் மூலம் டெத் ஓவர்களில் அருமையாக வீசி, முன்னாள், இந்நாள் ஜாம்பவான்கள் அனைவரின் பாராட்டுகளையும் குவித்தார் நடராஜன். அதன் விளைவாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான வலைப்பயிற்சி பவுலராக எடுக்கப்பட்டார்.
undefined
சைனி, வருண் சக்கரவர்த்தி ஆகிய வீரர்களின் காயத்தால், இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஆடும் வாய்ப்பை பெற்ற நடராஜன், அந்த வாய்ப்பை மிகச்சிறப்பாக பயன்படுத்தி அபாரமாக பந்துவீசி, ஆட்டத்தின் முக்கியமான கட்டங்களில் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணி கேப்டன் கோலியின் நன்மதிப்பை பெற்று, ஒருசில போட்டிகளிலேயே கேப்டன் கோலியின் ஆஸ்தான வீரராகவும் மாறிவிட்டார். கேப்டன் விராட் கோலியும் அணி நிர்வாகமும் தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை வீணடிக்காமல், முதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன், 2வது போட்டியில் 2 விக்கெட்டுகளையும் 3வது டி20 போட்டியில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
undefined
யார்க்கர் மன்னன் நடராஜன், ஆஸ்திரேலியாவில் அபாரமாக பந்துவீசி இந்திய அணியீன் வெற்றிக்கு உதவியதுடன், ஆஸி., ஊடகங்களின் தலைப்பு செய்தியாகவே மாறிப்போனார். சின்னப்பம்பட்டியில் இருந்து சென்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் சாதித்த பிறகும், அடக்கத்துடன் பழையதை மறக்காத மற்றும் மரியாதை கொடுக்கும் அவரது பண்பு, அவரை மேலும் உயர்த்துகிறது. பவுலிங்கால் மட்டுமல்லாது, தனது பண்புகளாலும் உயர்ந்து விளங்குகிறார் நடராஜன்.
undefined
சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நடராஜன், கிரிக்கெட் என்ற கனவுடன் வறுமையையும் சேர்த்தே சுமந்து வளர்ந்தவர். அவர் கஷ்டப்படும் காலத்தில் அவருக்கு ஆதரவாக இருந்து ஊக்கமளித்து உதவியும் செய்த அவரது நண்பரான ஜெயப்பிரகாஷ் என்பவரை, இந்திய அணிக்காக ஆடுமளவிற்கு உயர்ந்த பின்பும், ஜெயப்பிரகாஷ் அண்ணன் என்று, அவர் செய்த உதவியை இன்றுவரை நினைவுகூர்ந்து நெகிழ்கிறார் நடராஜன். நன்றி மறக்கும் இந்த கலியுகத்தில், தனக்கு கஷ்ட காலத்தில் உதவிய ஜெயப்பிரகாஷை, அனைத்து பேட்டிகளிலும் நினைவுகூர்ந்து அவரை உலகறிய செய்து தனது நன்றிக்கடனை செலுத்துகிறார் நடராஜன். மேலும் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான், ஐபிஎல்லில் தனது ஜெர்சியில் தனது பெயருக்கு முன் ஜேபி என்று சேர்த்து, ஜேபி நட்டு என்று தனது பெயரை ஜெர்சியில் பொறித்து பயன்படுத்திவருகிறார். நன்றி மறவா அவரது பண்பு, அவர் மீதான மதிப்பை மேலும் உயர்த்துகிறது.
undefined
இந்திய அணியில் ஆட வாய்ப்பு பெற்று, ஆஸ்திரேலியாவில் அசத்தி, சர்வதேச அளவில் நடராஜன் புகழ்பெற்றபோதும், அவரது பெற்றோர் நடத்திவந்த சில்லி சிக்கன் கடையை விட்டுவிடாமல், இன்றும் அதை தொடர்ந்துவருகின்றனர். தங்களது மகனின் வெற்றிகளையும் சாதனைகளையும் கண்டு மனதுக்குள் மகிழ்ந்தாலும், ஆணவமெல்லாம் இல்லாமல், இன்றும் எளிமையுடன் தங்களது இயல்பு வாழ்க்கையிலிருந்து பிறழாமல், எளிமையுடன் வாழ்ந்துவருகின்றனர். நடராஜனின் பெற்றோரது எளிமையும் பண்பும்தான் நடராஜனிடமும் இருக்கிறது.
undefined
இயல்பாகவே சாந்தமானவரான நடராஜன், நிஜ வாழ்க்கையில் ஆணவத்தையோ, களத்தில் ஆக்ரோஷத்தையோ எல்லாம் காட்டுவதில்லை. எளிமையாகவும் அமைதியாகவும், காரியத்தில் மட்டுமே கண்ணாக இருந்து சாதித்து கொண்டிருக்கிறார். சோனி டென் ஸ்போர்ட்ஸ் சேனலில் இருந்து முரளி கார்த்திக், நடராஜனை தமிழில் நேர்காணல் செய்தபோது, அண்ணன் என்று முரளி கார்த்திக்கை உரிமையுடனும் அனுபுடனும் கூப்பிட்டதுடன், அடக்கமான அவரது பேச்சு, அனைவரையும் கவர்ந்ததுடன், அந்த வீடியோ செம வைரலானது.
undefined
2017 ஐபிஎல்லில் ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட நடராஜன், அந்த பணத்தை கொண்டு தனது குடும்பத்தின் ஏழ்மையை போக்க வேண்டும் என்று சுயநலத்துடன் மட்டும் சிந்திக்காமல், தன்னை போல திறமையை வைத்துக்கொண்டு சாதிக்க துடிக்கும் ஏழை சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை கைதூக்கிவிடும் விதமாக, தனது சொந்த ஊரில் கிரிக்கெட் அகாடமியை தொடங்கி நடத்திவருகிறார். அந்த அகாடமியில் அறுபது பேர் வரை கட்டணமில்லாமல் இலவசமாக கிரிக்கெட் கற்று வருகிறார்கள்.
undefined
நடராஜனின் நன்றி மறவாத, பழையதை மறக்காத மற்றும் தன்னுடன் சேர்த்து மற்றவர்களையும் வளர்த்துவிட வேண்டும் என்ற அவரது பண்புகளும் அடக்கமான குணமும், அவருக்கு மென்மேலும் புகழை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.
undefined
click me!