
ரோகித் சர்மாவை நான் எப்படி பார்த்தேனோ அதே போன்று தான் இப்போதும் இருக்கிறார் என்று டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடிய முன்னாள் நியூசிலாந்து ஆல் ரவுண்டர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறியிருக்கிறார். ஐபிஎல் சீசன் தொடங்கிய போது அதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் இடம் பெற்றிருந்தது. அந்த அணியில் ரோகித் சர்மாவும் ஒரு வீரராக இடம் பெற்றிருந்தார்.
அவருடன் ஸ்காட் ஸ்டைரிஸூம் ஒரு வீரராக இடம் பெற்றிருந்தார். இருவரும் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் சக வீரர்களாக இருந்தனர். 2009 ஆம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் டிராபி வென்றது. அதன் பிறகு ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட தொடங்கினார்.
ஒரு கேப்டனாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 முறை டிராபி வென்று கொடுத்துள்ளார். 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக இடம் பெற்று விளையாடி வந்த ரோகித் சர்மா ஐபிஎல் 2024 தொடருக்கு முன்னதாக கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏகப்பட்ட சலசலப்பு ஏற்பட்டது. ரோகித் சர்மா ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை விமர்சனம் செய்தனர். மேலும், அதனை பின்பற்றுவதையும் நிறுத்தினர். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்று 10 போட்டிகளில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் தான் கடந்த 2008 ஆம் ஆண்டு ரோகித் சர்மாவை சந்தித்தது குறித்து நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் சந்தோஷமாக பகிர்ந்திருக்கிறார். ஐபிஎல் 2008ல் சக வீரராக ரோகித் சர்மாவை பார்க்க எனக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது. டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் இடம் பெற்று எங்களுடன் இருந்தார். அப்போது அவருக்கு ஒரு 19 அல்லது 20 வயது தான் இருக்கும். குழந்தை மாதிரி இருந்தார்.
இந்தியா மற்றும் இலங்கை தொடருக்கு பிறகு நான் அவரை திரும்ப பார்த்தேன். 16 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே ஆள்தான் என்று ஸ்டைரிஸ் கூறியிருக்கிறார். ஐபிஎல் முதல் சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் கடைசி இடம் பிடித்து வெளியேறியது. ஆனால் வெற்றிக்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தும் நாங்கள் கோட்டைவிட்டோம்.
இதற்கு காரணம், பேட்டிங் பலமாக இருந்தால் பவுலிங் பலவீனமாக இருந்தது. இதுவே பவுலிங் பலவீனமாக இருந்தால் பேட்டிங் பலமானதாக இருந்தது. ஆல் ரவுண்டர்கள் ஓரளவு கை கொடுத்தாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை. எனினும், 2ஆவது சீசனில் ஆடம் கில்கிறிஸ்ட் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி டிராபியை கைப்பற்றி சாதனை படைத்தோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரையில் 257 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 43 அரைசதங்கள், 2 சதங்கள் உள்பட மொத்தமாக 6,628 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 15 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். அதிகபட்சமாக 109* ரன்கள் எடுத்திருக்கிறார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரையில் 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வந்த ஹிட்மேன் ரோகித் சர்மா ஒரு கேப்டனாக 165 போட்டிகளில் விளையாடி சராசரி 28.62 உடன் 4,236 ரன்கள் எடுத்துள்ளார்.
ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அவரை தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது விடுவிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒருவேளை ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டால் ஏலத்தில் இடம் பெற்று அதிக தொகைக்கு மற்ற அணிகளால் ஏலம் எடுக்கபட வாய்ப்புகள் இருக்கிறது.
அதில் முதலிடத்தில் இருப்பது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, 2ஆவது இடத்திலிருப்பது பஞ்சாப் கிங்ஸ் தான். இந்த 2 அணிகளும் இதுவரையில் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றவில்லை. ஏதேனும் ஒரு அணியால் ஏலம் எடுக்கப்படும் ரோகித் சர்மா அந்த அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று ஐபிஎல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணமாக அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை டிராபிய இந்திய அணிக்கு வென்று கொடுத்த பெருமை ரோகித் சர்மாவை சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.