பையன் பட்டைய கிளப்புறான்.. அடுத்த சீசனில் தெறிக்கவிட்ருவான்..! தோனி நம்பிக்கை

First Published May 21, 2022, 3:50 PM IST

சிஎஸ்கே அணியின் மலிங்காவான மதீஷா பதிரனா திறமையான ஃபாஸ்ட் பவுலர் என்றும், அடுத்த சீசனில் அவர் பெரிய பங்களிப்பு செய்வார் என்றும் சிஎஸ்கே கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல் 15வது சீசன் சிஎஸ்கே அணிக்கு சரியாக அமையவில்லை. 4 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி இந்த சீசனில் பிளே ஆஃபிற்குக்கூட தகுதிபெறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்த சீசனில் 14 லீக் போட்டிகளில் ஆடி வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றதால் பிளே ஆஃபிற்கு முன்னேற முடியவில்லை.
 

ஐபில்லில் முதல் முறையாக லீக் சுற்றுடன் வெளியேறிய சிஎஸ்கே அணி, அடுத்த சீசனில் முழு பலத்துடன் திரும்பி 2021 ஐபிஎல்லில் கோப்பையை வென்றது. அதுபோல அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி கோப்பையை தூக்குவதற்கான வாய்ப்பு கூட உள்ளது.

அதற்கு காரணம், இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் சில திறமையான வீரர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக மிகச்சிறந்த ஃபாஸ்ட்பவுலர்கள் சிஎஸ்கேவிற்கு கிடைத்துள்ளனர். தீபக் சாஹர் இல்லாத குறையை, பவர்ப்ளேயில் அருமையாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி தீர்த்துவைத்தார் இடது கை ஃபாஸ்ட் பவுலர் முகேஷ் சௌத்ரி. அவருடன் இணைந்து மற்றொரு இளம் ஃபாஸ்ட் பவுலரான சிமர்ஜீத் சிங்கும் அருமையாக பந்துவீசினார். எனவே அடுத்த சீசனில் தீபக் சாஹருடன் இவர்களும் இணையும்போது, சிஎஸ்கே அணி கூடுதல் பலம்பெறும்.
 

இவர்களுடன் இலங்கையை சேர்ந்த, மலிங்காவின் பவுலிங் ஆக்‌ஷனை கொண்ட மதீஷா பதிரனாவும் கிடைத்த ஒருசில வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி சிறப்பாக பந்துவீசினார். எனவே இந்த சீசன் சிஎஸ்கேவிற்கு வெற்றிகரமானதாக அமையவில்லை என்றாலும், சில இளம் திறமைசாலிகள் அடையாளம் காணப்பட்டனர் என்றவகையில், சிஎஸ்கேவின் எதிர்காலத்திற்கு இது நல்லது.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, இளம் வீரர்கள் கிடைக்கும் வாய்ப்புகளில் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம் முகேஷ் சௌத்ரி. இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலும் ஆட வாய்ப்பு பெற்றார். அவர் முதல் போட்டியில் ஆடியதற்கும், கடைசி போட்டியில் ஆடியதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. முதல் போட்டிக்கும் கடைசி போட்டிக்கும் நிறைய வளர்ந்துள்ளார். டெத் ஓவர்களை அருமையாக வீசினார். எனவே அந்த அனுபவங்களை பயன்படுத்தி அடுத்த சீசனில் விட்ட இடத்திலிருந்து தொடங்கவேண்டும். அதுதான் நாங்கள் இளம் வீரர்களிடமிருந்து எதிர்பார்ப்பது. அதைவிடுத்து மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொடங்கக்கூடாது. 
 

எங்கள் மலிங்கா(மதீஷா பதிரனா) உண்மையாகவே சிறந்த பவுலர். அவரது பவுலிங்கை பிக் செய்வது கடினம். அடுத்த சீசனில் பதிரனா பெரியளவில் பங்களிப்பு செய்வார் என நினைக்கிறேன் என்று தோனி கூறினார்.
 

click me!