இந்தியா வெற்றி பெற 1008 தேங்காய் உடைத்து வழிபாடு
இந்தியாவில் நடந்து வரும் 13வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று, உலகக் கோப்பையைக் கைப்பற்ற மதுரை மேலமாசி வீதி - வடக்கு மாசி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
மதுரை ஆலா சுந்தர விநாயகர் கோயில்
இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் 2023, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
இந்தியா - ஆஸ்திரேலியா
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்ற வேண்டி மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் இணைந்து வடக்கு மாசி மேலமாசி வீதி சந்திப்பில் உள்ள நேரு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோயிலில் விசேஷ பூஜை நடத்தப்பட்டது.
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை
தொடர்ந்து உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும் வீரர்களின் போட்டோக்கள் மற்றும் உலக கோப்பை போட்டோ இடம் பெற்ற பெரிய பதாகையை வைத்து அர்ச்சனை செய்து, மகா தீபாராதனை நடைபெற்றது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டி
கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல், முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட அனைத்து வீரர்களின் பெயர்களை தனித்தனியாக சொல்லி சிறப்பு அர்ச்சனையும் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 'ஆல் த பெஸ்ட்' இந்தியா என்ற கோஷம் முழங்க 1008 தேங்காய் உடைத்து சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப் போட்டி
மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் மற்றும் ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்க பட்டயத் தலைவர் நெல்லை பாலு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர் முருகானந்தபாண்டி, அத்வி மீடியா ஆதவன், விநாயகா இம்பெக்ஸ் மகேந்திரன், சுப்பிரமணியன், ஆர்.குமார், திருநகர் ரோட்டரி சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை நேரு ஆலால சுந்தர விநாயகர் கோயில்
நியூசிலாந்து அணியுடன் ஆடிய அரையிறுதி போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி, ஏற்கனவே மதுரை எஸ்.எஸ். காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவர் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.