சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இதற்கான முயற்சியை தொடர்ந்து எடுத்து வந்த நிலையில், 2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC)அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஒலிம்பிக்கில் 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே பங்கேற்க முடியும். அதாவது ஆண்கள் பிரிவில் 6 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் என ஒவ்வொரு அணியிலும் 15 வீரர்கள் என மொத்தம் 90 கிரிக்கெட் வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
6 அணிகள் இறுதி செய்யப்படும்
ஐசிசியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து என 12 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும், 94 நாடுகள் அசோசியேட் உறுப்பினர்களாக உள்ளன. இதனால் ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்னதாக தகுதிச்சுற்று போட்டிகள் நடத்தப்பட்டு அந்த 6 அணிகள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி இருந்தது.