
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக இடம் பெற்ற அணி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ். அந்த அணியின் கேப்டனாக கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார். அறிமுக சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 9ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆனால், எலிமினேட்டர் போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது. இதே போன்று கடந்த ஆண்டு நடந்த 16ஆவது சீசனில் 2ஆவது முறையாக விளையாடி 14 போட்டிகளில் 8ல் வெற்றியும், 5ல் தோல்வியும் அடைந்தது. மேலும், ஒரு போட்டிக்கு முடிவு இல்லாத நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. முதல் சீசனைப் போன்று எலிமினேட்டரில் தோல்வி அடைந்து வெளியேறியது.
தற்போது 3ஆவது சீசனில் விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், இதுவரையில் விளையாடிய 6 போட்டிகளில் 3 வெற்றியும், 3 தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் அந்த அணியின் கேப்டன் கேஎல் ராகுல் இன்று தனது 32ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
அவரது பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம் வாங்க… கடந்த 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி பெங்களூருவில் பிறந்தார். இவரது முழு பெயர் கண்ணனூர் லோகேஷ் ராகுல்.
ஆசிரியர் குடும்பம். அப்பா கேஎன் லோகேஷ், மங்களூருவில் உள்ள என்ஐடிகேயில் சிவில் இன்ஜினியரிங் துறையில் பேராசிரியர். இதே போன்று அம்மா ராஜேஸ்வரி மங்களூரு யுனிவர்சிட்டியில் இணை பேராசிரியர். கே.எல்.ராகுலின் தந்தை சுனில் கவாஸ்கரின் தீவிர ரசிகர். ஆகையால், தனது மகனுக்கு அவரது பெயரை வைக்க விரும்பினார். ஆனால், அவர் ரோகன் கவாஸ்கரின் முதல் பெயரை ராகுல் என்று தவறாகக் கருதி, ராகுல் என்று பெயரிட்டுள்ளார்.
பள்ளி பருவம் முதல் வாலிபால், ஹாக்கி, கால்பந்து ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டவராக இருந்தார். 11 வயது முதல் கிரிக்கெட் விளையாடினார். இதையடுத்து 17ஆவது வயது பெங்களூர் யுனைடெட் கிரிக்கெட் கிளப்பில் இணைந்தார். ரஞ்சி டிராபியில் விளையாடுவதற்கு முன்னதாக கர்நாடகா அணியில் அண்டர் 13, 15, 17, 19 மற்றும் 23 வயது கிரிக்கெட்டில் விளையாடினார். ராகுல் டிராவிட்டின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். ஆகையால், அவரைப் போன்று பேட்டிங் செய்வதை ஆர்வமாக கொண்டுள்ளார்.
தனது 18ஆவது வயதில் முதல் தர கிரிக்கெட்டில் விளையாடினார். இதில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி 61 ரன்கள் எடுத்து அனைவரது பார்வையும் ஈர்த்தார். தனது முதல் தர கிரிக்கெட்டில் மூன்று சதம் விளாசி அசத்தினார். 2014 – 15 ஆம் ஆண்டுகளில் ரஞ்சி டிராபியில் உத்தரப்பிரதேச அணிக்காக 448 பந்துகளில் 337 ரன்கள் எடுத்தார்.
இந்த சீசனில் சிறப்பாக விளையாடியதோடு, 3 சதங்கள், 3 முறை 90 ரன்கள் உள்பட மொத்தமாக 1033 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதும் வென்று அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். இதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு நடந்த பாக்ஷிங் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றார்.
அறிமுக போட்டியில் 3, 1 ரன்கள் எடுத்த நிலையில் 2ஆவது டெஸ்ட் போட்டியில் 110 ரன்கள் எடுத்து அசத்தினார். 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமானார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் ரூ.1 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இதுவரையில் 124 போட்டிகளில் விளையாடிய கேஎல் ராகுல் 4 சதங்கள், 34 அரைசதங்கள் உள்பட 4367 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி பாலிவுட் நடிகையும், சுனில் ஷெட்டியின் மகளுமான அதியா ஷெட்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.