35 வயதான வில்லியம்சன் 33 சராசரியுடன் 2575 ரன்கள் குவித்து, நியூசிலாந்தின் இரண்டாவது அதிக டி20 ரன் குவித்த வீரராக உள்ளார். இதில் 18 அரைசதங்கள் அடங்கும். 95 ரன்கள் அதிகபட்ச ஸ்கோர் அடித்துள்ளார். 2011-ல் டி20 போட்டிகளில் அறிமுகமான வில்லியம்சன், 75 போட்டிகளில் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
அவரது தலைமையில் அந்த அணி இரண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளுக்கும் (2016 & 2022) மற்றும் ஒரு இறுதிப் போட்டிக்கும் (2021) தகுதி பெற்றது.
உலகின் தரம்வாய்ந்த பேட்ஸ்மேன்
நியூசிலாந்து கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் வீனின்க், வில்லியம்சனின் முடிவை மதிப்பதாகவும், டி20 அணிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கு வணக்கம் செலுத்துவதாகவும் கூறினார்.
“ஒரு வீரராக கேனின் செயல்பாடுகளும், டி20 அணியின் கேப்டனாக அவரது சேவையும் அளப்பரியது. உலகம் முழுவதும் அனைத்து சூழல்களிலும் அவர் குவித்த ரன்கள், அவர் ஒரு உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதைப் பிரதிபலிக்கின்றன. அவர் நிச்சயமாக அணியை நல்ல நிலையில் விட்டுச் செல்கிறார்'' என்று ஸ்காட் வீனின்க் தெரிவித்துள்ளார்.