3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள நிலையில், முதல் ஒருநாள் போட்டி இன்று சிட்னியில் நடக்கிறது. முதலில் ஒருநாள் தொடர், பின்னர் டி20 தொடர், கடைசியாக டெஸ்ட் தொடர் நடக்கவுள்ளது.
ஐபிஎல்லில் காயமடைந்த ரோஹித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிசெய்து வந்த நிலையில், அவர்கள் இருவரும் டெஸ்ட் தொடருக்குள்ளாக முழு ஃபிட்னெஸ் அடைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் ஃபிட்னெஸை அடைய காலம் எடுக்கும் என்பதால், முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், இஷாந்த் சர்மா ஒட்டுமொத்த டெஸ்ட் தொடரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக 97 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 297 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சீனியர் ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மா, ஆஸ்திரேலியாவில் நிறைய ஆடிய அனுபவம் கொண்டவர். எனவே அவர் இந்த டெஸ்ட் தொடரில் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு. கோலியும் கடைசி 3 டெஸ்ட்டுகளில் ஆடமாட்டார் என்ற நிலையில், சீனியர் ஃபாஸ்ட் பவுலரான இஷாந்த் சர்மா தொடரிலிருந்து முழுவதுமாக நீக்கப்பட்டிருப்பது பெரும் பாதிப்பாக அமையும்.
காயத்தால் அவதிப்பட்டுவரும் மற்றொரு வீரரான ரோஹித் சர்மா, ஏற்கனவே முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரது உடற்தகுதி வரும் டிசம்பர் 11ம் தேதி பரிசோதிக்கப்பட்டு, ரோஹித் கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடுவது குறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.