
சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.தோனிக்கு பிறகு இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திச் சென்றவர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா. என்னதான் விராட் கோலியால் ஒரு ஐசிசி டிராபிகளை கூட வென்று கொடுக்க முடியாமல் போனாலும், ஐசிசி டிராபிகளை வென்ற இந்திய அணியில் ஒரு அங்கமாக விராட் கோலி இருந்திருக்கிறார்.
ஆனால், ரோகித் சர்மா அப்படியில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தோற்றாலு கூட, ஆஸிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோற்று டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்காக வென்று கொடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விராட் கோலி அடித்துக் கொடுத்த 76 ரன்கள் தான் அணியின் வெற்றிக்கு வித்திட்டுள்ளது. அதோடு, 2ஆவது முறையாக இந்திய அணியும் டிராபியை கைப்பற்றியுள்ளது. இந்த சந்தோஷம் நீண்ட நேரம் நீடிப்பதற்குள்ளான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் அடுத்தடுத்து சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். ஆனால், அவர்களுக்கு திறமையும், வயதும் இருக்கும் போது ஏன், அதற்குள்ளாக ஓய்வு அறிவித்தார்கள் என்பது பற்றி தான் இன்னும் தெரியவில்லை.
எது எப்படியோ, இருவரும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். ஆனால் இதுவும் நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. ஏனென்றால், தற்போது ரோகித் சர்மாவிற்கு 37 வயதாகிறது. விராட் கோலியோ 36 வயதை நெருங்குகிறார். இருந்தாலும் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இருவரும் ஓய்வு குறித்து அறிவிக்கும் நேரம் வரும்.
அதன் பிறகு இந்திய அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. என்னதான், இளம் வீரர்கள் இந்திய அணியில் இருந்தாலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் என்று இந்திய அணியில் ஒரு சிலரைத் தவிர யாரும் இல்லை. அந்த ஒரு சிலர் கூட அடிக்கடி காயம் காரணமாக அணியிலிருந்து விலகும் சூழல் ஏற்படுகிறது.
அப்படியிருக்கும் பட்சத்தில் முழுமையாக இந்திய அணியை வழிநடத்தக் கூடியவர்கள் யார் என்று கேள்வி எழும் போது அதற்கான சரியான தேர்வாக சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் பெயர் தான் அடிபடுகிறது. இதற்கு முக்கிய காரணம் ருதுராஜ் கெய்க்வாட் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு தங்கம் வென்று கொடுத்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் தோனியின் கேப்டன்ஸியின் கீழ் விளையாடியுள்ளார்.
அதோடு, சிஎஸ்கே அணிக்கு தலைமை தாங்கி அணியையும் கடந்த சீசனில் வழிநடத்தியுள்ளார். இவரது தலைமையிலான சிஎஸ்கே விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடம் பிடித்து கடைசியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
ஆனால், சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் இரட்டை சதம் விளாசி பல சாதனைகள் படைத்திருந்தாலும், ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சரியான திசையில் வழிநடத்துவதில் தோல்வியை தழுவினார். எனினும், போதிய அனுபவம் இல்லாதது தான் இதற்கான காரணமாக பார்க்கப்படுகிறது. எனினும், அடுத்தடுத்த சீசன்களில் அணியை வழிநடத்தி போதிய அனுபவம் பெற்று அணிக்கு டிராபி வென்று கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 25 வயதாகும் கில் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் உள்பட 1,492 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று 47 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6 சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் உள்பட 2,338 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 21 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 578 ரன்கள் எடுத்துள்ளார்.
இதே போன்று 27 வயதாகும் கெய்க்வாட், காயம் காரணமாக இந்திய அணியில் இடம் கிடைப்பதில் தடுமாறி வருகிறார். எனினும், எதிர்காலத்தில் இந்திய அணியில் சிறப்பான ஒரு இடத்தை பிடித்து தனது திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கெய்க்வாட் 6 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 115 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 23 டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 633 ரன்கள் எடுத்துள்ளார்.
கோலி மற்றும் ரோகித் இருவரும் ஓய்வை நெருங்கி வரும் நிலையில் கில் மற்றும் கெய்க்வாட் இருவரும் எதிர்காலத்திற்கு சிறந்த வீரர்களாக நம்பிக்கை அளிக்கின்றனர். ஆனால் அணியில் அனுபவம் வாய்ந்த வீரராக ரிஷப் பண்ட் இருக்கும் போது அவருக்கு போதிய வாய்ப்புகள் தற்போது தான் கிடைத்து வரும் நிலையில் இனி வரும் காலங்களில் அணியை வழிநடத்தக் கூடிய தகுதியை பெறுவார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார்.
ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயம் காரணமாக அணியிலிருந்து விலகி வருகிறார். ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே விலகினார். ஆதலால், முகமது ஷமி அணியில் இடம் பெற்றார். இதே போன்று சூர்யகுமார் யாதவும் காயம் காரணமாக அணியிலிருந்து விலகுகிறார். ஆஸிக்கு எதிரான தொடரின் போது காயம் காரணமாக விலகினார்.
இந்திய அணியின் கேப்டனுக்கான தகுதி சூர்யகுமார் யாதவ்விற்கும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரோகித் சர்மாவின் ஓய்விற்கு பிறகு ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் யாரேனும் ஒருவர் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இந்திய அண்யின் எதிர்காலம் சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்வாட் கையில் தான் இருக்கிறது என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.