
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் 2024ஆம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக வரும் 19ஆம் தேதி முதல் முறையாக துபாயில் ஐபிஎல் 2024 ஏலம் நடக்க இருக்கிறது. இந்த ஏலத்திற்கு 1166 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்து வைத்துள்ளார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான், ஐபிஎல் 2024 ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், பதிவு செய்த 1166 வீரர்களில் 833 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு 333 வீரர்கள் மட்டுமே இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியன் பிரீமியர் லீக் 2024 தொடருக்கான வீரர்களின் ஏலத்திற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
துபாயில் டிசம்பர் 19, 2023 அன்று கோகோ கோலா அரங்கத்தில் நடக்க உள்ளது. இந்த ஏலத்தில் மட்டும் 333 வீரர்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த 333 வீரர்களில் 214 வீரர்கள் இந்தியர்கள் மற்றும் 119 வெளிநாட்டு வீரர்கள் இதில், 2 வீரர்கள் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் 116 வீரர்கள் (Capped) கேப்டு வீரர்கள். அதாவது சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள். மேலும், 215 வீரர்கள் முதல் முறையாக ஐபிஎல் தொடரில் இடம் பெறுகின்றனர். அதாவது Uncapped என்று சொல்லப்படும் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்கள். இது தவிர அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த 2 வீரர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 10 செட்டுகளாக வீரர்களின் ஏலம் நடைபெற இருக்கிறது. இதில், ஒவ்வொரு செட்டிலும், பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், விக்கெட் கீப்பர், பவுலர், பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர், விக்கெட் கீப்பர், பவுலர் என்று வீரர்களின் பட்டியல் இடம் பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் இடம் பெறும் 10 அணிகளில் மொத்தமாக 77 வீரர்களுக்கான ஏலம் நடைபெற இருக்கிறது. இதில், 30 வீரர்கள் வெளிநாட்டவர்கள். 45 வீரர்கள் இந்தியர்கள் மற்றும் அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த 2 வீரர்கள் என்று மொத்தமாக 77 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர்.
இதில், 23 வீரர்கள் அடிப்படை விலையாக ரூ.2 கோடி நிர்ணயித்துள்ளனர். ரூ.1.5 கோடி பட்ஜெட்டில் 13 வீரர்கள் இருக்கின்றனர். ரூ.1 கோடிக்கான ரேஸில் 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இது தவிர ரூ.50 லட்சத்தை ரச்சின் ரவீந்திரா தனது அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளார். இந்த ஏலத்திற்கு மொத்தமாக ரூ.262.95 கோடி வரையில் செலவு செய்யப்பட இருக்கிறது. ஐபிஎல் ஏலமானது உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரடிப்படி பிற்பகல் 2.30 மணிக்கும் தொடங்க இருக்கிறது.