இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் பீகாரின் ராஜ்கிரில் திறக்கப்பட்டுள்ளது. 40,000 இருக்கை வசதி மற்றும் 13 பிட்ச்களுடன் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம், ஒரு பெரிய விளையாட்டு வளாகத்தின் ஒரு பகுதியாகும்.
உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்திற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய சர்வதேச கிரிக்கெட் மைதானம் பீகாரில் உள்ள ராஜ்கிரில் கட்டப்பட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) மாநில முதல்வர் நிதிஷ் குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த மைதானத்தின் கட்டிடக்கலை வடிவமைப்பு ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தை (Sydney Cricket Ground) முன்மாதிரியாகக் கொண்டு, பாரம்பரிய செங்கல் மற்றும் கல் அழகியலுடன் நவீனமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மைதானம் தனி கிரிக்கெட் மைதானம் மட்டுமல்லாமல், சுமார் 90 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் மிகப் பெரிய ராஜ்கிர் விளையாட்டு வளாகத்தின் ஒரு பகுதியாகும். இதில் கிரிக்கெட்டுடன் சேர்த்து 28 உள்ளரங்கு மற்றும் வெளியரங்கு விளையாட்டுகளுக்கான வசதிகள் உள்ளன.
25
40,000 இருக்கை வசதி, 13 பிட்ச்
இந்த மைதானத்தில் 40,000 பார்வையாளர்கள் அமர முடியும். இதில் 3,000 வி.வி.ஐ.பி விருந்தினர்களுக்கான பிரத்யேக இருக்கை வசதிகளும் உள்ளன. இதன் மொத்த இருக்கை கொள்ளளவு 45,000 வரை இருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிரிக்கெட் மைதானத்தில் மொத்தம் 13 பிட்ச்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 6 பிட்ச்கள் மகாராஷ்டிராவின் உயர்தர சிவப்பு மண்ணைப் பயன்படுத்தியும், 7 பிட்ச்கள் மோகாமாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கருப்பு மண்ணைக் கொண்டும் அமைக்கப்பட்டுள்ளன. இது வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இருவருக்கும் ஏற்றவாறு பிட்ச் நிலைமைகளை வழங்கும்.
35
ஆடம்பரமான பெவிலியன்
வீரர்களுக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய ஐந்து மாடி பெவிலியன் (G+5) கட்டப்பட்டுள்ளது. இதில் சௌனா (Sauna) அறைகள், நவீன உடற்பயிற்சிக் கூடம் (Gym), பிசியோதெரபி அறைகள் மற்றும் மருத்துவ மையங்கள் ஆகியவை சர்வதேச வீரர்களின் தரத்திற்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன.
மைதானத்தில் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் அதிநவீன வடிகால் அமைப்பு (Automated Drainage System) மற்றும் தெளிப்பான்கள் (Sprinklers) அமைக்கப்பட்டுள்ளன. இதனால், பருவமழைக் காலத்திலும் விளையாட்டைத் தொடர முடியும்.
இந்த மைதானம் சூரிய ஒளியின் மூலமாக மின்சாரத்தைப் பெறும் வசதியையும் கொண்டிருக்கிறது.
பிற வசதிகள்: இது வீரர்களுக்குத் தேவையான பிரத்யேக தங்குமிடங்கள், ஊக்கமூட்டும் மையம் (Motivational Center), விளையாட்டு ஆராய்ச்சி மையம் (Sports Research Center), விளையாட்டு நூலகம் (Sports Library) மற்றும் நீச்சல் குளங்கள் போன்ற வசதிகளுடன் ஒரு முழுமையான விளையாட்டு மையமாக விளங்குகிறது.
55
ரூ.1,121 கோடி செலவு
சுமார் ரூ.1,121 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மைதானம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தர நிர்ணயங்களுக்கு முழுமையாக இணங்குவதால், எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு முற்றிலும் தயாராக உள்ளது. இதன் மூலம், பீகார் மாநில கிரிக்கெட் அணிக்கு இது சொந்த மைதானமாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.