
India Women Loss Semi Final Chance and Eliminated From Womens T20 World Cup 2024: துபாயில் நடைபெற்ற மகளிர் T20 உலகக் கோப்பை 2024 போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தானை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம், அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் அரையிறுதிக்குள் நுழையும் இந்தியாவின் கனவு பறிபோனது. 2016க்குப் பிறகு நியூசிலாந்து அணி முதல் முறையாக அரையிறுதிக்குள் நுழைகிறது.
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் குவிந்தது. இந்தப் போட்டியில் இந்திய மகளிர் அணி பீல்டிங்கில் பல கேட்சுகளை கோட்டைவிட்டது. இதையடுத்து அரையிறுதி கனவோடு பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா ஓரளவு பார்ட்னர்ஷிப் எடுத்து கொடுத்த போதிலும் பின் வரிசை வீராங்கனைகள் கம்பெனி கொடுக்கவில்லை. இதனால், இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் எடுத்தது. இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதம் அடித்தார்.
எனினும் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இருந்தது. அதாவது நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் நெட் ரன் ரேட்டில் 2ஆவது இடத்தில் உள்ள இந்திய மகளிர் அணி எளிதில் அரையிறுதிக்கு முன்னேறும் நிலை இருந்தது.
இன்று நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசி கேப்டன் ஷோஃபி டிவைன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் பாகிஸ்தானுக்கு வெற்றி பெற நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மோசமாகச் சரிந்தது. 11.4 ஓவர்களில் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியுடன், நியூசிலாந்து அணி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளைப் பெற்று ‘ஏ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.
ஆஸ்திரேலியா அணி எட்டு புள்ளிகளுடன் முதலிடத்தையும், நியூசிலாந்து அணி ஆறு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்தன. தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்ததுதான் அரையிறுதி வாய்ப்பை இழக்கக் காரணமாக அமைந்தது.
சுழற்பந்து வீச்சாளர் அமெலியா கெர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், வேகப்பந்து வீச்சாளர்களான லியா தஹு (1/8) மற்றும் ஈடன் கார்சன் (2/7) ஆகியோர்தான் நியூசிலாந்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தனர். பாகிஸ்தான் அணி 12 ஓவர்களுக்குள் இலக்கை அடைந்தால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், அதற்கு முன்பே ஆட்டமிழந்துவிட்டது.
முன்னதாக, பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் நியூசிலாந்து அணியை குறைந்த ஸ்கோருக்கு கட்டுப்படுத்தினர். தொடக்க ஆட்டக்காரர்களான சூசி பேட்ஸ் (28) மற்றும் ஜார்ஜியா பிளிம்மர் (17) ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்த்தனர். அவர்கள் நல்ல தொடக்கம் கொடுத்தபோது, பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் போக்கையே மாற்றினர்.
ஆஃப்-பிரேக் பந்து வீச்சாளர் உமைமா சோஹைல் (4 ஓவர்களில் 1/14) மற்றும் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் நாஷ்ரா சந்து (4 ஓவர்களில் 3/18) ஆகியோர் நடு ஓவர்களில் அற்புதமாகப் பந்து வீசினர். 21 டாட் பந்துகளை வீசி, நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தனர்.