Published : Nov 03, 2025, 12:04 AM ISTUpdated : Nov 03, 2025, 12:17 AM IST
India Women Crush South Africa to Win WWC 2025: மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடிய இந்திய அணி உலகக்கோப்பை 2025ல் சாம்பியன் பட்டம் வென்றது. முதல் உலககோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது.
மகளிர் 50 ஓவர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. பைனலில் 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று முதல் கோப்பையை தட்டித் தூக்கியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிரடி காட்டிய ஷெபாலி வர்மா சிறப்பாக விளையாடி 78 பந்துகளில் 7 பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்களுடன் 87 ரன்கள் விளாசினார்.
25
இந்திய அணி சூப்பர் பேட்டிங்
தீப்தி சர்மா அட்டகாசமாக விளையாடி 58 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்தார். மேலும் ஸ்மிருதி மந்தனா 58 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார். அரையிறுதி போட்டியில் சதம் விளாசிய ஜெமீமா 24 ரன்கள் அடித்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் அயாபோங்கா காகா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்பு இமாலய இலக்கை துரத்தினால் கோப்பையை தட்டித் தூக்கலாம் என்ற கனவுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி சிறப்பான தொடக்கம் கண்டது.
35
நல்ல தொடக்கம் கண்ட தென்னாப்பிரிக்கா
அந்த அணி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 51 ரன்கள் சேர்த்தது. ஓரளவு சிறப்பாக விளையாடிய டாஸ்மின் பிரிட்ஸ் 23 ரன் அடுத்து ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த அன்னேகே போஷ் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்ரீ சரணி பந்தில் அவுட் ஆனார். பின்னர் வந்த சுனே லூஸ் 25 ரன்னில் ஷெபாலி வர்மா பந்தில் காலியானார். ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் தொடக்க வீராங்கனை லாரா வால்வார்ட் சூப்பராக விளையாடினார்.
ஆட்டத்தின் திருப்பு முனை இதுதான்
ஆனால் மறுபுறம் மாரிசேன் காப் (4), சினாலோ ஜாஃப்டா (16) விரைவில் வெளியேற தென்னாப்பிரிக்கா அணி 30 ஓவரில் 148/5 என பரிதவித்தது. பின்பு ஜோடி சேர்ந்த லாரா வால்வார்ட், அன்னெரி டெர்க்சன் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டு 50 ரன்கள் சேர்த்தது. நன்றாக விளையாடிய அன்னெரி டெர்க்சன் 37 பந்தில் 35 ரன் எடுத்து தீப்தி சர்மா பந்தில் போல்டானார். இதுதான் ஆட்டத்தின் திருப்பு முனையாகும்.
இதனைத் தொடர்ந்து அட்டகாசமாக விளையாடி சூப்பர் சதம் (98 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 101 ரன்) விளாசிய லாரா வால்வார்ட் தீப்தி சர்மா பந்தில் கேட்ச் ஆனார். அதே ஓவரில் க்ளோ ட்ரையனும் (9) வெளியேறினார். பின்னர் களமிறங்கிய 2 வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் தென்னாப்பிரிக்கா அணி 45.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், உலககோப்பையையும் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
55
முதல் கோப்பையை வென்று வரலாற்று சாதனை
இந்திய அணி தரப்பில் சூப்பராக பவுலிங் செய்த தீப்தி சர்மா 9 ஓவரில் 39 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பேட்டிங்கிலும் 58 ரன் விளாசி ஆல்ரவுண்டராக ஜொலித்த அவர் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இந்திய மகளிர் அணி 50 ஓவர் உலகக்கோப்பையை வெல்வது இதுவே முதன்முறையாகும். உலககோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகளுக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.