
New Zealand has stepped up: Will India retaliate? : இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் 3ஆவது முறையாக ஐசிசி தொடர் இறுதிப் போட்டிக்கு வந்துள்ளன. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு வந்தது. இதே போன்று ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் 2அவது அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு வந்துள்ளது.
இதன் மூலமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இதன் மூலமாக ஐசிசி தொடர்களில் இரு அணிகளும் 3ஆவது முறையாக மோதுகின்றன. இதற்கு முன்னதாக கடந்த 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஐசிசி நாக் அவுட் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்துகள் அணிகள் மோதின.
இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் குவித்தது. இதில் கேப்டன் சவுரவ் கங்குலி 130 பந்துகளில் 9 பவுண்டரி, 4 சிக்சர் உள்பட 117 ரன்கள் எடுத்தார். சச்சின் டெண்டுல்கர் 69 ரன்கள் எடுத்தார். ராகுல் டிராவிட் 22 ரன்களும், யுவராஜ் சிங் 18 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய நியூசிலாந்து 49.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிறிஸ் கெய்ர்ன்ஸ் 102 ரன்கள் (நாட் அவுட்) எடுத்தார். இந்த தொடர் கென்யாவில் நடைபெற்றது.
இதில் காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டியில் இந்தியா முறையே ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை தோற்கடித்த நிலையில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியை தழுவியது. இதே போன்று 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
இதில், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து 249 ரன்கள் எடுத்தது. இந்தியா 2ஆவது இன்னிங்ஸில் 17 ரன்கள் மட்டுமே எடுக்க, நியூசிலாந்து 140/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய இந்தியா விராட் கோலி (117) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் (105) சதத்தால் 397/4 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 327/10 ரன்கள் எடுத்து 70 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இதுவரையில் இரு அணிகளும் ஐசிசி போட்டிகளில் மட்டும் நேருக்கு நேர் 20 போட்டிகளில் மோதியுள்ளன. இதில், 6 போட்டிகளில் மட்டுமே இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது. 12 போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்றிருக்கிறது. 2 போட்டிகளுக்கு முடிவு இல்லை.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஐசிசி போட்டிகள்:
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை – மொத்தம் 11 போட்டிகள், இந்தியா 5 வெற்றி, நியூசிலாந்து 5 வெற்றி, ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
ஐசிசி டி20 உலகக் கோப்பை - மொத்தம் 3 போட்டிகள், நியூசிலாந்து 3 வெற்றி.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி - மொத்தம் 2 போட்டிகள், இந்தியா 1 வெற்றி, நியூசிலாந்து 1 வெற்றி
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி - மொத்தம் 5 போட்டிகள், இந்தியா 1 வெற்றி, நியூசிலாந்து 3 வெற்றி, ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
இந்தியா மற்றும் நியூசிலாந்து டெஸ்ட்:
இந்தியா வந்த நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில், 3 போட்டியிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து சரித்திரம் படைத்தது. இப்போது இரு அணிகளும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9ஆவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி:
இறுதிப் போட்டி உள்பட இதுவரையில் நடைபெற்ற 9 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் 2000 ஆம் ஆண்டில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. ஆனால், இந்தியா 2 முறை வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.