
இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான லீட்ஸில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (101 ரன்), கேப்டன் சுப்மன் கில் (147 ரன்) மற்றும் ரிஷப் பண்ட் (134) ஆகிய 3 பேர் சதம் அடித்தனர். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் டாங்கே 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆலி போப் (106 ரன்) சதம் விளாசினார். பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்பு இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கே.எல்.ராகுல் (137), ரிஷப் பண்ட் (118) சதம் நொறுக்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து 371 ரன்கள் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி கடைசி நாள் முடியும் அரை மணி நேரத்துக்கு முன்பு 5 விக்கெட் மட்டுமே இழந்து இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. அதிரடி சதம் (149) விளாசிய பென் டக்கெட் மேட்ச் வின்னராக ஜொலித்தார்.
இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன?
இந்திய அணி வீரர்கள் 6 கேட்ச்களை தவற விட்டதும் (ஜெஸ்வால் மட்டும் 4 கேட்ச்களை விட்டார்) பும்ராவைத் தவிர சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் எதிர்பார்த்த அளவு பந்துவீசாததும் தோல்விக்கு முக்கிய காரணமாகி விட்டது.
மேலும் இரண்டு இன்னிங்சிலும் பின்வரிசை வீரர்கள் கொத்து, கொத்தாக ஆட்டமிழந்தது தோல்விக்கு பெரும் காரணமாக அமைந்து விட்டது. இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 2ம் தேதி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற உள்ளது.
மேலும் எட்ஜ்பாஸ்டன் ஓரளவுக்கு சுழலுக்கு கைகொடுக்கும் என்பதால் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக குல்தீப் யாதவ் இடம்பெறலாம் எனவும் தகவல்கள் கசிகின்றன. இதேபோல் முதல் டெஸ்ட்டில் அறிமுகமாகி பேட்டிங்கில் சொதப்பிய தமிழக வீரர் சாய் சுதர்சனும் அணியில் இடம்பிடிப்பது சிக்கலாகியுள்ளது. முதல் டெஸ்ட்டில் பீல்டிங்கின்போது தோள்பட்டையில் காயம் அடைந்த சாய் சுதர்சன் இன்னும் முழு உடற்தகுதி பெறவில்லை என கூறப்படுகிறது.
சாய் சுதர்சனுக்கு சிக்கல்
2வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்குள் காயம் சரியாகி விட்டால் சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்படுவார். இல்லையென்றால் அவருக்கு பதிலாக மற்றொரு தமிழ்நாடு வீரர் அபிமன்யூ ஈஸ்வரன் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. கருண் நாயருக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு வழங்கப்படலாம். ஜஸ்பிரித் பும்ரா 2வது டெஸ்ட்டில் விளையாடுகிறார். பிரசித் கிருஷ்ணா இடத்துக்கும் எந்த ஆபத்தும் இல்லை.
2வது டெஸ்ட்டில் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஓப்பனிங்கில் களமிறங்குவார்கள். 3வது இடத்தில் சாய் சுதர்சன் அல்லது அபிமன்யூ ஈஸ்வரனும், 4வது இடத்தில் கேப்டன் சுப்மன் கில்லும் களம் காண்கின்றனர். 5வது இடத்தில் ரிஷப் பண்ட்டும், 6வது இடத்தில் கருண் நாயரும் விளையாடுகின்றனர்.
7வது இடத்தில் ரவீந்திர ஜடேஜாவும், 8வது இடத்தில் நிதிஷ்குமார் ரெட்டி அல்லது குல்தீப் யாதவ், 9வது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா, 10வது இடத்தில் முகமது சிராஜ், 11வது இடத்தில் பிரசித் கிருஷ்ணாவும் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்
இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: சுப்மன் கில் (கேப்டன்), கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் அல்லது அபிமன்யூ ஈஸ்வரன், ரிஷப் பண்ட், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ்குமார் ரெட்டி அல்லது குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா.
இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி எங்கு நடைபெறுகிறது?
இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் ஜூலை 2ம் தேதி முதல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியை எந்த டிவியில் பார்க்கலாம்?
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்தியாவில் சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். ஆங்கிலம், தமிழ், இந்தி வர்ணையுடன் போட்டியை கண்டு ரசிக்கலாம்.
இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட்டை எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளின் வர்ணனையுடன் பார்க்கலாம்.
இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும்?
இந்தியா vs இங்கிலாந்து 2வது டெஸ்ட் ஒவ்வொரு நாளும் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு போட்டிகள் தொடங்கும். 3.00 மணியளவில் டாஸ் போடப்படும்.