இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டுடன் மோதிய முகமது சிராஜுக்கு ஐசிசி 15 சதவீதம் அபராதம் விதித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இங்கிலாந்து வீரர் பென் டக்கெடுடன் மோதிய இந்திய வீரர் முகமது சிராஜுக்கு ஐசிசி போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.
நேற்றைய 4ம் நாள் ஆட்டத்தில் சிராஜ் பென் டக்கெட்டுடன் மோதிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது சிராஜ் பந்தில் புல் ஷாட் அடிக்க முயன்ற பென் டக்கெட் 12 ரன்னில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானர்.
24
சிராஜின் செயலுக்கு வலுத்த கண்டனம்
அப்போது சிராஜ் விக்கெட் வீழ்த்திய உற்சாகத்தில், டக்கெட்டின் முகத்திற்கு நேராகச் சென்று சில வார்த்தைகளை கூறி கூச்சலிட்டதுடன், அவரது தோளிலும் மோதினார். பென் டக்கெட் இதற்கு பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக சென்றார். சிராஜின் இந்த செயல் பெரும் கண்டனத்துக்கு வழிவகுத்தது. கிரிக்கெட்டில் விக்கெட் எடுத்தால் ஆக்ரோஷமாக கொண்டாடலாம். ஆனால் மற்ற வீரரை சீண்டும் விதமாக சிராஜ் நடந்து கொண்டது மிகவும் தவறு என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர்.
முகமது சிராஜுக்கு அபராதம்
சிராஜின் அடாவடித்தனம் ஐசிசி விதியை மீறிய செயல் என்பதால் அவருக்கு அபராதம் விதிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கூறிய நிலையில் ஐசிசி சிராஜ்க்கு அபராதம் விதித்துள்ளது. சிராஜுக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தகுதிநீக்கப் புள்ளியும் (demerit point) வழங்கப்பட்டுள்ளது. ஐசிசி நடத்தை விதிமுறைகளின் பிரிவு 2.5-ஐ மீறியதாக கண்டறியப்பட்டதால் சிராஜுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
34
சிராஜுக்கு 2வது விதிமீறல்
முகமது சிராஜுக்கு கடந்த 24 மாதங்களில் ஏற்பட்ட 2வது விதிமீறல் இதுவாகும். இதன் மூலம் அவரது தகுதிநீக்கப் புள்ளிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிநீக்கப் புள்ளிகளைப் பெற்றால் அது சஸ்பென்ஷன் புள்ளிகளாக மாற்றப்படும். இதனைத் தொடர்ந்து அந்த வீரர் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படுவார்.
கடந்த டிசம்பர் 2024ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் அவுட்டான போதும் சிராஜ் இதேபோல் ஆக்ரோஷமாக டந்து கொண்டதால் ஐசிசி அவருக்கு அபராதம் மற்றும் ஒரு தகுதிநீக்க புள்ளியை கொடுத்தது. சிராஜ் எதிரணி வீரர்களிடம் வம்பிழுப்பதை தொடர்ந்து இதேபோல் செய்து வருகிறார். அவரை பிசிசிஐ கண்டிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.