சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது ஆண்டு மாநாட்டில் WTC இறுதிப் போட்டிகள், ஆப்கான் மகளிர் அணிக்கு ஆதரவு, அமெரிக்க கிரிக்கெட் மற்றும் புதிய உறுப்பினர்கள் குறித்து முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சிங்கப்பூரில் நடைபெற்ற தனது ஆண்டு மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக, 2027, 2029 மற்றும் 2031 ஆம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிகளை நடத்தும் உரிமையை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திற்கு (ECB) வழங்கியுள்ளது. அண்மையில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திய ECB-யின் திறனை அங்கீகரிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
25
ஆப்கான் மகளிர் அணிக்கு ஆதரவு
அசோசியேட் உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தில், இடம்பெயர்ந்த ஆப்கான் வம்சாவளி பெண் கிரிக்கெட்டர்களுக்கு ஆதரவளிப்பதற்கான முயற்சிகள் குறித்து ஐசிசி முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. இந்த முயற்சி, ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் க்வாஜா மேற்பார்வையின் கீழ், ஐசிசி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI), இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) மற்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா (CA) ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ், உள்நாட்டு விளையாட்டு வாய்ப்புகள் மற்றும் 2025 இல் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி மகளிர் உலகக் கோப்பை மற்றும் 2026 இல் இங்கிலாந்தில் நடைபெறும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கிய ஐசிசி உலகளாவிய நிகழ்வுகளில் பங்கேற்க ஆதரவு வழங்கப்படும்.
35
அமெரிக்க கிரிக்கெட்டின் நிலை
அமெரிக்க கிரிக்கெட் குறித்து, ஐசிசி தனது முந்தைய நிலையை மீண்டும் வலியுறுத்தியது. அமெரிக்க கிரிக்கெட் வாரியம் மூன்று மாத காலத்திற்குள் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவது உள்ளபட விரிவான நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளது. இருப்பினும், பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையும் வாரியத்திற்கு உள்ளது.
குருமூர்த்தி பழனி (பிரான்ஸ் கிரிக்கெட்), அனுராக் பட்நகர் (கிரிக்கெட் ஹாங்காங், சீனா) மற்றும் குர்தீப் கிளெய்ர் (கிரிக்கெட் கனடா) ஆகியோர் ஐசிசி தலைமை நிர்வாகிகள் குழுவில் (CEC) துணை உறுப்பினர் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஐசிசி தலைமை நிர்வாகி ஜெஃப் அலார்டிஸ் மற்றும் வெளியேறும் CEC உறுப்பினர்களான சுமட் தாமோதர் (போட்ஸ்வானா கிரிக்கெட் அசோசியேஷன்), ரஷ்பால் பஜ்வா (கிரிக்கெட் கனடா), மற்றும் உமாயர் பட் (கிரிக்கெட் டென்மார்க்) ஆகியோருக்கு உலகளாவிய கிரிக்கெட்டிற்கு அவர்கள் ஆற்றிய சேவைக்காக நன்றி தெரிவிக்கப்பட்டது.
55
ஐசிசியில் 110 உறுப்பினர்கள்
திமோர்-லெஸ்டே கிரிக்கெட் கூட்டமைப்பு மற்றும் சாம்பியா கிரிக்கெட் யூனியன் ஆகியவை ஐசிசி துணை உறுப்பினர்களாக முறையாக இணைந்ததன் மூலம் ஐசிசி குடும்பத்தில் இரண்டு புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்ந்துள்ளது.
ஐசிசி ஆண்டு பொதுக்கூட்டத்தில் 2024ஆம் ஆண்டிற்கான ஐசிசி குழுமத்தின் வருடாந்திர அறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள், தணிக்கையாளரின் அறிக்கை ஆகியவையும் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டன.