Hardik Pandya Ferrari Car : மும்பை சாலையில் இருந்த ஒரு ஸ்பீட் பிரேக்கரை கடக்க முடியாமல் ஹர்திக் பாண்டியா சிரமப்பட்டார். கஷ்டப்பட்டு காரை நகர்த்திய பிறகு, அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளிடம் காரை நிறுத்தி கை குலுக்கிப் பேசினார்.
ஐபிஎல் 19வது சீசனின் முதல் போட்டிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி தயாராகி வரும் நிலையில், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் சொகுசு கார் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது. 12 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது புத்தம் புதிய ஃபெராரி காரில் மும்பை வீதிகளில் வலம் வந்தபோது, ஒரு ஸ்பீட் பிரேக்கரைக் கடக்க அவர் பட்ட கஷ்டம்தான் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
ஸ்போர்ட்ஸ் கார்களில் 'லோ கிரவுண்ட் கிளியரன்ஸ்' இருப்பது வழக்கம். அதாவது, காருக்கும் தரைக்கும் இடையேயான உயரம் மிகவும் குறைவாக இருக்கும். இதுதான் ஹர்திக்கிற்கு பெரிய சிக்கலாக அமைந்தது. சாதாரண கார்களைப் போல நேராக ஸ்பீட் பிரேக்கரில் ஏற்றினால் காரின் அடிப்பகுதி தட்டிவிடும் என்பதால், ஹர்திக் மிகவும் கவனமாக காரை ஓட்டினார். காருக்கு எந்த சேதமும் ஏற்படாமல் இருக்க, காரை குறுக்குவாட்டில் (cross angle) மெதுவாக திருப்பி, அந்தத் தடையை கடந்தார்.
34
IPL 2026 Mumbai Indians News
ஸ்பீட் பிரேக்கர் தடையை வெற்றிகரமாக கடந்த பிறகு, அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளைப் பார்த்ததும் காரை நிறுத்தினார் ஹர்திக். அவர்களிடம் கை குலுக்கி, சில நிமிடங்கள் பேசிவிட்டுச் சென்றார். மும்பை தெருக்களில் அவ்வளவாக பார்க்க முடியாத ஒரு சொகுசு காரில் தங்களுக்குப் பிடித்த வீரர் வந்ததைக் கண்ட போலீசாரும் உற்சாகமடைந்தனர்.
இன்று வான்கடே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் தனது முதல் போட்டியில் மோதுகிறது. கடந்த ஐந்து வருடங்களாக கோப்பையை வெல்லாத நிலையில், ஹர்திக் தலைமையில் இந்த முறை களமிறங்குகிறது மும்பை அணி. கடந்த ஆண்டு குவாலிஃபையர் 2 சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறிய மும்பை, இந்த முறை சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் 6வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.