இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபாரமாக ஆடியது. முதலில் பேட்டிங் ஆடி 374 ரன்களை குவித்து, இந்திய அணியை 308 ரன்களுக்கு சுருட்டி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா.
இந்திய அணியில் ஷமியை தவிர மற்ற அனைத்து வீரர்களுமே ரன்களை வாரி வழங்கினர். பும்ரா, சைனி, சாஹல் ஆகியோரின் பவுலிங்கை ஆஸ்திரேலிய வீரர்கள் பொளந்துகட்டினர். பேட்டிங்கிலும் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியாவை தவிர மற்ற வீரர்கள் சரியாக ஆடவில்லை.
பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இந்திய அணி பெரிதாக சோபிக்கவில்லையென்றாலும், மோசமான ஃபீல்டிங் தான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங், இந்திய அணி நன்றாகத்தான் ஆடியது. ஃபீல்டிங்கில் தான் படுமோசமாக சொதப்பியது. ஏராளமான கேட்ச்களை கோட்டைவிட்டதுடன், மிஸ்ஃபீல்டும் அதிகம். சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு வாய்ப்புமே மிக முக்கியம்; கேட்ச் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்; இல்லையெனில் பவுலர்கள் வெறுப்பும் விரக்தியும் அடைந்துவிடுவார்கள். மிஸ்ஃபீல்டு, பவுலர்களை கடுப்பாக்கும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.