
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 84 சிக்ஸர்களுடன் 2ஆவது இடத்தில் இருக்கிறார். விராட் கோலி 28 சிக்சர்களுடன் 16ஆவது இடம் பெற்றுள்ளார். வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா நாளை பங்கேற்கிறது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்த கையோடு வங்கதேசம் இந்தியாவில் காலூன்றியுள்ளது. இதுவரையில் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட ஜெயிக்காத வங்கதேசம் சரித்திர சாதனை படைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் களமிறங்குகிறது.
இதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வந்த இந்திய அணி வீரர்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா 84 சிக்ஸர்கள் அடித்து 2ஆவது இடம் பிடித்துள்ளார். 2013 முதல் 2024 வரையில் 59 டெஸ்ட் போட்டிகளில் 101 இன்னிங்ஸ் விளையாடி 84 சிக்ஸர்கள் அடித்து அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் 2 ஆவது இடம் பிடித்துள்ளார்.
இன்னும் 7 சிக்ஸர்கள் விளாசினால் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரேந்திர சேவாக்கின் 90 சிக்ஸர்கள் சாதனையை முறியடிப்பார். சேவாக் 103 டெஸ்ட் போட்டிகளில் 178 இன்னிங்ஸ் விளையாடி 90 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இந்திய அணியின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான எம்.எஸ்.தோனி 90 போட்டிகளில் 144 இன்னிங்ஸ் விளையாடி 78 சிக்ஸர்கள் விளாசி 3ஆவது இடம் பிடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் 329 இன்னிங்ஸ் விளையாடி 69 சிக்ஸர்கள் விளாசி 4ஆவது இடம் பிடித்திருக்கிறார்.
இவர்களைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா 64 சிக்ஸர்கள், கபில் தேவ் 61 சிக்ஸர்கள், சவுரவ் கங்குலி 57 சிக்ஸர்கள், ரிஷப் பண்ட் 55 சிக்ஸர்கள் என்று அடித்து அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 191 இன்னிங்ஸில் 26 சிக்ஸர்கள் விளாசி 16ஆவது இடம் பிடித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இதுவரையில் இந்தியா விளையாடிய 34 போட்டிகளில் 15 வெற்றியும், 7 தோல்வியும் அடைந்துள்ளது. 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. ஒரு போட்டி டை செய்யப்பட்டுள்ளது. கடைசியாக இங்கிலாந்திற்கு எதிராக விளையாடிய இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 759/7 ரன்கள் ஆகும். 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா அதிகபட்சமாக 759 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதற்கு முன்னதாக 1977 ஆம் ஆண்டு ஆண்டு இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான சாதனை படைத்தது.
சேப்பாக்கம் டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக சுனில் கவாஸ்கர் விளையாடிய 12 போட்டிகளில் 1018 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 236* ரன்கள் எடுத்தார். இதே போன்று சச்சின் டெண்டுல்கர் விளையாடிய 10 போட்டிகளில் 970 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக 165 ரன்கள் எடுத்தார். இதே போன்று பந்து வீச்சில் அனில் கும்ப்ளே விளையாடிய 8 போட்டிகளில் 48 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஹர்பஜன் சிங் 7 போட்டிகளில் விளையாடி 42 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த நிலையில் தான் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் முதல் முறையாக மோதுகின்றன. இந்த மைதானம் இந்தியாவிற்கு சாதகமான மைதானம் என்பதால் இந்திய அணி வெற்றி பெற்று புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது தோல்வியை விட அதிக வெற்றிகள் பெற்ற 4ஆவது அணி என்ற சாதனையை இந்தியா படைக்கும்.
இதுவரையில் 1932 ஆம் ஆண்டு முதல் இந்தியா விளையாடிய 579 போட்டிகளில் 178 வெற்றி, 178 தோல்விகளை தழுவியதோடு 222 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் பெறும் வெற்றி உள்பட 5 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் டெஸ்ட் வரலாற்றில் அதிக வெற்றிகளை பெற்ற 3ஆவது அணியாக இந்தியா சாதனை படைக்கும்.
நாளை (19 ஆம் தேதி) காலை 9.30 மணிக்கு தொடங்கும் சென்னை டெஸ்ட் போட்டி வரும் 23 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதே போன்று 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 27ஆம் தேதி கான்பூரில் தொடங்கிறது. சென்னை டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விலையானது ரூ.200 முதல் ரூ.1000 வரையில் கவுண்டர் டிக்கெட் நிர்யிணயிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி நாள்தோறும் போட்டி நடைபெறும் நாளன்று காலை 7 மணிக்கு கவுண்டர் டிக்கெட் விற்பனை தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதோடு, FGH Upper Stand டிக்கெட் விலை ரூ.200 என்றும், இது கேட் 11 (வாலாஜா சாலை) அருகில் உள்ள கவுண்டரில் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், IJK Lower Stand டிக்கெட் விலை ரூ.400 என்றும், இது கேட் 11 வாலாஜா சாலை அருகிலுள்ள கவுண்டரில் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், KMK Terraceக்கான டிக்கெட் விலை ரூ.1000 என்றும் இது கேட் 1 – விக்டோரியா ஹாஸ்டல் சாலை அருகிலுள்ள கவுண்டரில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் ரூ.1000 முதல் ரூ.15,000 வரையில் விற்பனை செய்யப்படுவதாக இன்ஸைடர் ஆப்பில் காட்டுகிறது.
இன்சைடர் வெப்சைட் மற்றும் ஆப் மூலமாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இந்த போட்டியானது ஜியோ சினிமாவில் நேரடியாக லைவ் ஸ்டிரீமிங் செய்யப்படுகிறது. மேலும், ஸ்போர்ட்ஸ் 18-1 மற்றும் 2 சேனல்களிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்ப்ர), துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், யாஷ் தயாள்.
வங்கதேசம்:
நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (கேப்டன்), ஷாகீப் அல் ஹசன், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகீர் ஹசன், ஷத்மன் இஸ்லாம், மெஹிடி ஹசன் மிராஸ், மஹிமுல் ஹக், முஷிபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), லிட்டன் குமார் தாஸ் (விக்கெட் கீப்பர்), தைஜூல் இஸ்லாம், நயீம் ஹசன், ஹசன் மஹ்முத், தஸ்கின் அகமது, நஹித் ராணா, சையது கலீத் அகமது, ஜாகெர் அலி அனிக்