
கடந்த 1994 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் சஞ்சு சாம்சன். இவரது தந்தை டெல்லியில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். மேலும், டெல்லி சந்தோஷ் டிராபியில் கால்பந்து வீரராகவும் இருந்துள்ளார். டெல்லியில் போலீஸ் கான்ஸ்டபிள் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு கேரளாவுக்கு சென்றுவிட்டனர்.
கிரிக்கெட்டை வாழ்க்கையாக கொண்டுள்ள சஞ்சு சாம்சனின் குழந்தை பருவ கனவு என்பது, ஐபிஎஸ் அதிகாரியாக வர வேண்டும் என்பது தான். ஆரம்பம் முதலே டெல்லி போலீஸ் காலனியில் வசித்து வந்த அவருக்கு இப்படியொரு ஆசை இருந்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த அண்டர் 13 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கேரளா அணியின் கேப்டனாக இருந்து 5 போட்டியில் 4 சதங்கள் உள்பட 973 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது தட்டிச் சென்றார்.
கடந்த 2008 - 09 ஆம் ஆண்டுகளில் நடந்த விஜய் மெர்ச்சண்ட் டிராபி தொடரில் கோவா அணிக்கு எதிராக 138 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். அதுமட்டுமின்றி 2 சதம் மற்றும் 2 அரை சதம் உள்பட 498 ரன்கள் குவித்தார். மேலும், அண்டர் 16 மற்றும் அண்டர் 19க்கு சஞ்சு சாம்சன் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
கடந்த 2010 - 11 ஆம் ஆண்டுகளில் நடந்த Cooch Behar Trophyயில் சிறப்பாக செயல்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவின் அண்டர் 19 அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மலேசியாவில் நடந்த ACC Under-19 Asia Cup போட்டியில் இடம் பெற்று இந்திய அணிக்காக விளையாடினார்.
ஆனால், 2012 Under-19 Cricket World Cup தொடரில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. எனினும், 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த 2013 End Under-19 Series தொடரில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக இருந்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த Under-19 Cricket World Cup போட்டியில் இந்திய அணிக்கு துணை கேப்டனாக இருந்துள்ளார். அதோடு, இந்த தொடரில் கென்யா அணிக்கு எதிராக அதிகபட்சமாக 45 பந்துகளில் 85 ரன்கள் குவித்தார்.
கடந்த 2015 - 16 ஆம் ஆண்டுகளில் ரஞ்சி டிராபி தொடரில் கேரளா அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். இதே போன்று 2017 - 18 ஆம் ஆண்டுகளில் நடந்த ரஞ்சி டிராபி தொடரில் 7 போட்டிகளில் 627 ரன்கள் எடுத்தார்.
இப்படி பல போட்டிகளில் பங்கேற்ற சஞ்சு சாம்சன், 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் 17 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பெற்றார். ஆனால், அவர் பங்கேற்கவில்லை. இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் இடம் பெற்றார். ஆனால், அதன் பிறகு நீக்கப்பட்டார்.
ஆனால், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2015ஆம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் அம்பத்தி நாயுடுவுக்குப் பதிலாக அணியில் இடம் பெற்று விளையாடினார். இந்தப் போட்டியில் அவர் 36 ரன்கள் எடுத்தார். எனினும், இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டிக்கு அழைக்கப்பட்ட இவர், தொடர்ந்து பெஞ்சில் தான் அமர வைக்கப்பட்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இடம் பெற்று விளையாடினார். 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அறிமுகமான இவர், நியூசிலாந்துக்கு எதிராக 2022 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டியில் கடைசியாக விளையாடினார்.
இப்படி தொடர்ந்து அணியில் இடம் பெற்று அதன் பிறகு நீக்கப்பட்டு வந்த சஞ்சு சாம்சன் 11 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று, 330 ரன்களும், 16 டி20 போட்டிகளில் விளையாடி 296 ரன்களும் எடுத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான அணியில் அவர் இடம் பெறவில்லை. 2019 ஆம் ஆண்டு கோலி தலைமையிலான அணியில் அவர் இடம் பெறவில்லை. 2022 ஆம் ஆண்டு ரோகித் தலைமையிலான அணியில் இடம் பெறவில்லை.
இதே போன்று கேஎல் ராகுல் தலைமையிலான அணியில் இடம் பெறவில்லை. ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியிலும் சஞ்சு சாம்சன் ஓரங்கப்பட்டார். இப்படி இந்திய அணியில் கேப்டன்கள் வேண்டுமென்றால் மாறியிருக்கலாம் ஆனால், சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது மட்டும் இன்னும் மாறவேயில்லை. இவ்வளவு ஏன், தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் கூட அவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.