
இந்திய அணியில் வலது கை பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கையை விட, இடது கை பந்து வீச்சாளர்கள் அல்லது சுழற்பந்து வீச்சாளர்களை விட மிகவும் குறைவு. ஆனால், எல்லா காலத்திலும் இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளர்கள் என்று பார்க்கும் போது நமது நினைவிற்கு வருவது ஜாகீர் கான்.
அவர், இடது கை வேகப்பந்து வீச்சாளர் மட்டுமின்றி இந்தியாவின் கோட் (GOAT - The Greatest of All Time) வேகப்பந்து வீச்சாளராகவும் இருந்தார். தற்போது இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா நிகழ்த்தி வரும் சாதனைகளை ஜாகீர் கான் 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அணிக்காக நிகழ்த்தியிருக்கிறார்.
ஆரம்பகால வாழ்க்கை – உள்நாட்டு கிரிக்கெட் வாழ்க்கை
கடந்த 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி பரோடாவில் பிறந்தார். தற்போது அவருக்கு வயது 45. அவர் 1996 இல் மும்பைக்கு மாறினார் மற்றும் மும்பை மைதானங்களில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அவரது திறமையை கண்டு வியந்த மூத்த வீரர்கள் அவரை சென்னையில் உள்ள MRF பேஸ் அகாடமிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரது திறமையை கண்டு அவரை உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் பரோடா அணிக்காக விளையாட வலிறுத்தப்பட்டார். பரோடா அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்ததைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார்.
ஜாகீர் கான் - சர்வதேச கிரிக்கெட் அறிமுகம், தொழில் மற்றும் விக்கெட்டுகள்: கடந்த 2000 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கென்யாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலமாக கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். இதே போன்று அதே ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
இதையடுத்து 2002 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்தார். இந்தியாவின் 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் 18 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஒரு பவுலராக பல சாதனைகள் படைத்திருந்தாலும் ஒரு பேட்ஸ்மேனாக 2004 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக 75 ரன்கள் எடுத்த 11ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
மற்ற வீரர்களைப் போலவே ஜாகீர் கானும் மோசமான ஃபார்ம் காரணமாக ஓரங்கட்டப்பட்டார். அதோடு, பிசிசிஐயின் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஜாகீர் கான், 2007 ஆம் ஆண்டு ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் ஒரு பகுதியாக இருந்தார்.
இதே போன்று 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்தார். இந்த தொடரில் 9 போட்டிகளில் விளையாடி அவர் 21 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜாகீர் கான் 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் 11 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இதே போன்று, 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் ஒரு முறை மட்டும் 5 விக்கெட் எடுத்தார். மேலும், 17 டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதுதவிர ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்டதிலிருந்து பல அணிகளில் இடம் பெற்று விளையாடியுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக விளையாடிய ஜாகீர் கான் அதன் பிறகு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடியிருக்கிறார்.
இவ்வளவு ஏன், 2016 அம் ஆண்டு மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் டெல்ல் கேபிடல்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற ஜாகீர் கான் ஐபிஎல் தொடரில் 102 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.