ஆஸ்திரேலிய பேட்டிங் ஜாம்பவான் டான் பிராட்மேன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சராசரி, அதிக இரட்டை சதங்கள், முதல் தர கிரிக்கெட்டில் அதிக சராசரி, ஒரே நாளில் முச்சதம், ஒரு டெஸ்ட் தொடரில் 974 ரன்கள் என பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.
1930ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரில், பிராட்மேன் தனது உச்சகட்ட ஃபார்மில் இருந்தார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் அவர் தனி ஆளாக ஆதிக்கம் செலுத்தினார். பந்துவீச்சை துவம்சம் செய்து எளிதாக ரன் குவித்தார். ஏழு இன்னிங்ஸ்களில் 139.14 சராசரியுடன் 4 சதங்கள் உட்பட 974 ரன்கள் எடுத்தார்.
1930ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் டான் பிராட்மேனின் ஆதிக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், இரண்டாவது அதிக ரன் எடுத்தவரான இங்கிலாந்தின் ஹெர்பர்ட் சுட்க்ளிஃப் 436 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். இது பிராட்மேனின் மொத்த ரன்களில் பாதிக்கும் குறைவாகும். இது அப்போது 22 வயதே ஆன பிராட்மேனின் இணையற்ற திறமையைக் காட்டுகிறது.
டான் பிராட்மேனுக்கு முன், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த சாதனை இங்கிலாந்தின் ஜாம்பவான் பேட்ஸ்மேன் வாலி ஹம்மண்ட் வசம் இருந்தது. அவர் 1928/29 ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒன்பது இன்னிங்ஸ்களில் 113.12 சராசரியுடன் 905 ரன்களைக் குவித்தார். இதில் 4 சதங்களும் அடங்கும்.
பிராட்மேன் ஹம்மண்டின் சாதனையை முறியடித்த பிறகு, எந்த ஒரு பேட்ஸ்மேனும் ஒரு டெஸ்ட் தொடரில் 900 ரன்களையே நெருங்கவில்லை.