இந்தியா இங்கிலாந்து இடையே அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டி, 2ம் நாளே முடிந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி, 2ம் நாளே முடிந்தது அனைவருக்கும் வியப்பளித்தது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க ஸ்பின்னர்களே ஆதிக்கம் செலுத்தினர்.
இந்திய அனியின் இடது கை ஸ்பின்னர் அக்ஸர் படேல், 11 விக்கெட்டுகளையும், சீனியர் ஸ்பின்னர் அஷ்வின் 7விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இங்கிலாந்து அணி கேப்டனும் ஆஃப் ஸ்பின்னருமான ஜோ ரூட் 5 விக்கெட்டுகளையும், ஜாக் லீச் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் மொத்தம் 30 விக்கெட்டுகள் விழுந்தன. அதில் 28 விக்கெட்டுகள் ஸ்பின்னர்கள் வீழ்த்தியவை.
இதையடுத்து அகமதாபாத் ஆடுகளத்தை வழக்கம்போலவே முன்னாள் வீரர்கள் பலர் விமர்சிக்க தொடங்கினர். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான 73 வயது டேவிட் லாய்ட், அகமதாபாத் பிட்ச் சென்னை பிட்ச்சை விட படுமோசம். ஐசிசி இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு டெஸ்ட் போட்டி இப்படியா நடக்கும்? 2ம் நாள் ஆட்டத்தின் பாதியிலேயே போட்டியே முடிந்துவிட்டது. துபாயிலிருந்து(ஐசிசி தலைமையிடம்) பதில் வர வேண்டும்.
பார்ட் டைம் ஸ்பின்னரான ஜோ ரூட்டெல்லாம் 5 விக்கெட் வீழ்த்தினார்; அதுவும் வெறும் 6 ஓவரில்.. பார்ட் டைம் ஸ்பின்னரான ஆஸி., முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தினார்; மைக்கேல் கிளார்க்கும் 6 விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். பார்ட் டைம் பவுலர்களுக்கே விக்கெட் கிடைக்கிறது என்றால் ஏதோ தவறாக இருக்கிறது என்று அர்த்தம். நான் கூட இந்த பிட்ச்சில்(அகமதாபாத்) விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்று டேவிட் லாய்ட் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் வெறும் 9 டெஸ்ட் மற்றும் 8 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள டேவிட் லாய்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தியதில்லை. ஆனால் அவரே அகமதாபாத்தில் விக்கெட் வீழ்த்துவாராம்.. அள்ளிவிடுறதுக்கு ஒரு அளவு இல்லையா? நீங்க ஆடுன காலத்துலயே ஒண்ணும் பண்ணல....