ஐபிஎல் 14வது சீசனுக்கான ஏலம் சென்னையில் நடந்துவருகிறது. கோர் டீம் வலுவாகவுள்ள சிஎஸ்கே, எப்போதுமே வதவதவென வீரர்களை எடுக்காது. தங்கள் அணிக்கு தேவையான இடங்களை நிரப்புவதற்காக, அவசியத்தின் அடிப்படையில் தெளிவான ஐடியாவுடன் ஏலத்தில் குறிப்பிட்ட சில வீரர்களை மட்டுமே எடுக்கும்.
இந்த ஏலத்திலும் அதைத்தான் செய்துவருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னிற்கு சாதகமானது என்பதால், சீனியர் ஸ்பின்னர்கள் ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர் ஆகியோர் கழட்டிவிடப்பட்டதால், இங்கிலாந்து ஸ்பின் ஆல்ரவுண்டர் மொயின் அலியை ரூ.7 கோடிக்கும், இந்திய ஸ்பின் ஆல்ரவுண்டர் கிருஷ்ணப்பா கௌதமை ரூ.9.25 கோடிக்கும் சிஎஸ்கே அணி எடுத்தது.
யாருமே எதிர்பார்த்திராத விதமாக டெஸ்ட் வீரர் புஜாராவை அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்திற்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. டெஸ்ட் வீரர்களாக முத்திரை குத்தப்பட்ட புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டுவந்த நிலையில், புஜாராவை சிஎஸ்கே அணி இம்முறை ஏலத்தில் எடுத்துள்ளது.
புஜாரா ஏற்கனவே ஐபிஎல் அணிகளில் இருந்துள்ளார். ஆனால் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. கேகேஆர்(2008-2010), ஆர்சிபி(2011-2013), கிங்ஸ் லெவன் பஞ்சாப்(2014) ஆகிய அணிகளில் இடம்பெற்றிருக்கிறார். 2014ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 6 சீசன்களாக ஐபிஎல் அணிகளால்புறக்கணிக்கப்பட்ட புஜாராவை சிஎஸ்கே அணி, இம்முறை ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. சிஎஸ்கே புஜாராவை எடுத்ததையடுத்து, ஏலத்தில் கலந்துகொண்ட அனைத்து அணிகளின் பிரதிநிதிகளும் கைதட்டி வரவேற்றனர்.