IND vs BAN: பாகிஸ்தான்ல சீன் போட்ட மாதிரியெல்லாம் இந்தியாவுல போட முடியாது – வங்கதேசத்தின் பிளானுக்கு ஆப்பு!

First Published | Sep 24, 2024, 10:27 AM IST

India vs Bangladesh, Ravichandran Ashwin: சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அஸ்வின் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் சாதனை.

India vs Bangladesh Test

பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது போன்று இந்தியாவையும் ஒயிட்வாஷ் செய்வோம் என்ற நம்பிக்கையோடு காலடி எடுத்து வந்த வங்கதேச அணிக்கு அஸ்வினின் அபாரமான சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் சாதனையோடு ரோகித் சர்மா அண்ட் கோ முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

பாகிஸ்தான் சென்ற வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்று வீழ்த்தி வரலாற்று வெற்றியோடு இந்தியாவில் கால் பதித்தது. மேலும், இந்தியாவில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. பலம் பொருந்திய பாகிஸ்தானையே வீழ்த்திவிட்டோம் என்ற இந்தியா எல்லா ஜூஜூபி என்ற நம்பிக்கையோடு வங்கதேசம் இந்தியாவுக்கு வந்தது.

IND vs BAN Test

பாகிஸ்தானுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தின் வெற்றிக்கு வித்திட்ட ஹசன் மஹ்மூத் மற்றும் நஹித் ராணா ஆகியோரை நம்பி வங்கதேச வீரர்கள் இந்தியா வந்தனர். ஆனால், அவர்களது நம்பிக்கை வீண் போகவில்லை. சென்னையின் கோட்டையான சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தின் வேகப்புயல் ஹசன் மஹ்மூத் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை காலி செய்தார்.

இதில், ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோரது விக்கெட்டுகளை எடுத்தார். அதன் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா கூட்டணி இந்திய அணியை சரிவிலிருந்து மீண்டது. அஸ்வின் 113 ரன்களும், ஜடேஜா 86 ரன்களும் எடுத்தனர். இதன் மூலமாக இந்தியா முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 376 ரன்கள் குவித்தது.

Tap to resize

Chennai Test

ஹசன் மஹ்மூத் பாகிஸ்தானைப் போன்று இந்தியாவிலும் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆனால், அவரது சாதனை பெரிதாக பேசப்படவில்லை. இதற்கு காரணம் ரவிச்சந்திரன் அஸ்வினின் சதம். பின்னர் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் பும்ராவின் சூறாவளிக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 149 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில், ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகள் எடுத்தார். ஆகாஷ் தீப், முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

Chepauk Stadium, IND vs BAN Test

இதைத்தொடர்ந்து 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2ஆவது இன்னிங்ஸை விளையாடி 287/4 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இதில், இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதே போன்று ரிஷப் பண்ட் 109 ரன்கள் எடுத்தார். வழக்கம் போன்று ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக வங்கதேச அணிக்கு 514 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

India vs Bangladesh Test

கடின இலக்கை துரத்திய வங்கதேச அணி நல்ல தொடக்கம் கொடுத்தாலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பவே 2ஆவது இன்னிங்ஸில் வங்கதேசம் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்து 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதல் விக்கெட்டை பும்ரா எடுத்துக் கொடுக்க அடுத்தடுத்த விக்கெட்டுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் எடுத்துக் கொடுத்து சாதனை படைத்தார். அஸ்வின், 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்தியா விளையாடிய 580 டெஸ்ட் போட்டிகளில் 179 வெற்றிகளை பெற்ற தோல்விகளை விட அதிக வெற்றிகள் பெற்ற 4ஆவது அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் 27 ஆம் தேதி கான்பூரில் தொடங்குகிறது.

இதற்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டது. முதல் போட்டியில் விளையாடிய அதே அணியே 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் வங்கதேசத்திற்கு எதிராக எல்லா போட்டியிலும் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை இந்தியா படைக்கும்.

Latest Videos

click me!