இந்தியா இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. 2.30 மணிக்கு போட்டி தொடங்கியது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் டோமினிக் சிப்ளி, 3வது ஓவரிலேயே ரன்னே அடிக்காமல் இஷாந்த் சர்மாவின் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.
இதையடுத்து, 3ம் வரிசையில் இறங்கிய பேர்ஸ்டோவும் டக் அவுட்டானார். 7வது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய அக்ஸர் படேல், அந்த ஓவரின் முதல் பந்திலேயே பேர்ஸ்டோவை வீழ்த்த, இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை 17 ரன்னில் அஷ்வின் எல்பிடபிள்யூ ஆக்கி அனுப்பினார்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பவுண்டரிகளாக விளாசி அரைசதம் அடித்த க்ராவ்லி, 84 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் அடித்திருந்த நிலையில், அக்ஸர் படேலின் சுழலில் அவரும் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அக்ஸர் படேலின் எந்த பந்து திரும்புகிறது, எந்த பந்து நேராக வருகிறது என்பதை கணிக்கமுடியாமல் ஆட்டமிழந்தார் க்ராவ்லி. 80 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இங்கிலாந்து அணி, முதல் செசன் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் அடித்திருந்த நிலையில், 2வது செசனின் முதல் ஓவரிலேயே போப்பை அஷ்வின் ஒரு ரன்னில் வீழ்த்த, 81 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி.