இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலை வகித்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 2 அணிகளிலும் தலா 2 மாற்றங்கள் செய்யப்பட்டன. இந்திய அணியில் ராகுல் மற்றும் ஷமிக்கு பதிலாக முறையே கில் மற்றும் உமேஷ் யாதவ் ஆகிய இருவரும் அணியில் சேர்க்கப்பட்டனர். ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் மற்றும் பாட் கம்மின்ஸுக்கு பதிலாக கேமரூன் க்ரீன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் ஆடினர்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.
புஜாராவை அவுட்டாக்கியது நேதன் லயன் இல்ல; ரோஹித் சர்மா தான்..! இந்தியா தோற்றால் நீங்கதான் காரணம் ரோஹித்
ஆஸ்திரேலிய அணி:
உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், கேமரூன் க்ரின், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, மேத்யூ குன்னெமன்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் யாருமே சரியாக பேட்டிங் ஆடவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் மளமளவென இந்திய வீரர்கள் ஆட்டமிழந்தனர். ரோஹித் சர்மா(12), கில்(21), புஜாரா(1), கோலி(22), ஜடேஜா(4), ஷ்ரேயாஸ் ஐயர்(0), பரத்(17), அக்ஸர்(12) என அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் முதல் இன்னிங்ஸில் வெறும் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி.
2ம் நாளான நேற்றைய ஆட்டத்தை ஹேண்ட்ஸ்கம்ப்பும் கேமரூன் க்ரீனும் தொடர்ந்தனர். இருவரும் வலது கை பேட்ஸ்மேன்கள் என்பதால் முதல் ஒரு மணி நேரம் முழுவதுமாக இடது கை ஸ்பின்னர்களான ஜடேஜா மற்றும் அக்ஸர் படேலை வீசவைத்தார் கேப்டன் ரோஹித். ஆனால் அவர்களால் விக்கெட் வீழ்த்த முடியாத நிலையில், ஒரு மணி நேரத்திற்கு அஷ்வினை அழக்க, ஹேண்ட்ஸ்கம்ப்பின் விக்கெட்டை அஷ்வின் 5வது விக்கெட்டாக வீழ்த்த, அடுத்த 5 விக்கெட்டுகளும் அடுத்த 11 ரன்களுக்குள் விழ 197 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணி ஆல் அவுட்டானது.
88 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். ரோஹித் சர்மா(12), கில்(5), கோலி(13), ஜடேஜா(7) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு மளமளவென ஆட்டமிழந்தனர். 5வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடி 27 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசி நம்பிக்கையளித்த நிலையில் அவரும் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேஎஸ் பரத்(3), அஷ்வின்(16) ஆகியோரும் சோபிக்கவில்லை. ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று தனி நபராக போராடி அரைசதம் அடித்த புஜாரா 59 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அக்ஸர் படேல் 15 ரன்கள் அடிக்க, 2வது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி.
அபாரமாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் சீனியர் ஸ்பின்னர் நேதன் லயன், ரோஹித், கில், புஜாரா, ஜடேஜா, பரத், அஷ்வின், உமேஷ் யாதவ், சிராஜ் ஆகிய 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரது சுழலில் வெறும் 163 ரன்களுக்கு சுருண்டது இந்திய அணி.
ஸ்பின்னிற்கு சாதகமான இந்திய ஆடுகளங்களில் இந்திய அணியை வீழ்த்துவது மிகக்கடினம். ஆனால் ஆஸ்திரேலிய அணி சிறப்பான பேட்டிங்கின் மூலம் இந்தியாவை எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடர் 2-1 என உள்ளது.